உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.,வினரால் சர்ச்சை! அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்

சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.,வினரால் சர்ச்சை! அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் பா.ஜ., -- எம்.பி., நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், துபேக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காதது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசின், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. மேலும், சட்டசபை அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிர்வலை

மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஜனாதிபதிக்கே காலக்கெடு விதித்ததால், இந்த உத்தரவு, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், 'சூப்பர் பார்லிமென்டாக செயல்படுவதா' என உச்ச நீதிமன்றத்தை கேள்வி எழுப்பியதுடன், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த விவகாரத்தையும் சுட்டிக் காட்டினார். அவருக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து, பா.ஜ., -- எம்.பி., நிஷிகாந்த் துபே, 'உச்ச நீதிமன்றமே சட்டங்களை இயற்றினால், சட்டசபைகளையும் பார்லிமென்டையும் மூடி விடலாம். நம் நாட்டில் மத சண்டைகளை உச்ச நீதிமன்றம் துாண்டுகிறது. 'உச்ச நீதிமன்றம் தன்னுடைய எல்லையை மீறுகிறது. நாட்டின் அனைத்து உள்நாட்டு மோதல்களுக்கும் தலைமை நீதிபதியே பொறுப்பு' என கடுமையாக விமர்சித்தார். வக்ப் வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கிய நிலையில், இந்த கருத்துகளை கூறினார்.

ஆபத்தானவை

இதுபோல, மற்றொரு பா.ஜ., -- எம்.பி.,யும், உ.பி., முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மா, 'பார்லிமென்டுக்கும், ஜனாதிபதிக்கும் யாரும் வழிகாட்டத் தேவையில்லை' என்றார். இந்நிலையில், நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் தெரிவித்துள்ளார். இதற்கு அனுமதி அளிக்கும்படி அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், 'உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக, மிகவும் மலிவான கருத்துகளை நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை மிகவும் ஆபத்தானவை; ஆத்திரமூட்டுபவை. எனவே, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

நிராகரிப்பு

இதற்கிடையே, 'உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி குறித்து பா.ஜ., - -எம்.பி.,க்கள் கூறிய கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவர்களின் சொந்த கருத்து; பா.ஜ., அவற்றை நிராகரிக்கிறது. நீதித்துறையையும், நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் பா.ஜ., மதிக்கிறது. 'அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல கட்சியின் மற்ற அனைவருக்குமே இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன்' என பா.ஜ., தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

'பாசாங்குத்தனமானது'

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்த எம்.பி.,க்கள் மீண்டும் மீண்டும் வெறுப்பு பேச்சுகளை பேசுவதில் கில்லாடிகள். யாரையாவது தாக்குவதற்கு இவர்களை பா.ஜ., பெரும்பாலும் பயன்படுத்துகிறது. பா.ஜ., தலைவரின் விளக்கமானது, முழுக்க முழுக்க பாசாங்குத்தனமானது. விளக்கத்தை கூறி, யாரையும் முட்டாளாக்க முடியாது. இருவரின் கருத்தில் அமைதி காப்பதன் வாயிலாக, அதை பா.ஜ., ஏற்கிறதா?இந்திய அரசியலமைப்பின் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் தொடர்ந்து மவுனம் சாதிப்பது, அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதாக அர்த்தமா? அப்படி இல்லை என்றால், இரு எம்.பி.,க்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
ஏப் 21, 2025 19:44

இதே போல குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை முடிக்காத நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து ஜனாதிபதி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டதால் ஏ‌ற்று‌க் கொள்ள முடியுமா.... நடக்குமா ???


பேசும் தமிழன்
ஏப் 21, 2025 19:43

ஒரு வழக்கை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும் என்று நேரம் நிர்ணயம் செய்யாமல்..... ஜனாதிபதி மற்றும் ஆளுநர் அவர்களுக்கு காலக்கெடு விதிப்பதை கண்டிப்பாக ஏ‌ற்று‌க் கொள்ள முடியாது.


venugopal s
ஏப் 21, 2025 15:35

பாஜக தலைவர் நட்டா அவர்கள் செய்கைக்கு பெயர் தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது!


Ramesh
ஏப் 21, 2025 14:17

யோவ் சும்மா இருய்யா.


Sivaprakasam Chinnayan
ஏப் 21, 2025 13:26

சரியான தீர்ப்பு


NAGARAJAN
ஏப் 21, 2025 13:21

அராஜகம் தாங்க முடியாமல் போய்விட்டது


Sankaran Natarajan
ஏப் 21, 2025 11:29

தனக்கு எதிரான ஒரு தீர்ப்பின் போது, இது வழங்கப்பட்ட தீர்ப்பு இல்லை வாங்கப்பட்ட தீர்ப்பு என்றார் கருணாநிதி. அதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததாக?


அப்பாவி
ஏப் 21, 2025 10:03

மூணு மாசத்துக்குள்ளாற நடவடிக்கை எடுத்து முடிங்க எசமான்.


பாமரன்
ஏப் 21, 2025 09:48

வாயத்தொறந்தா உங்களைத்தான் அவுரங்கசீப் காலத்தில் இருந்து இழுத்து திட்டுவார்யா... தேவையா...???


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 09:31

இழிவாகப் பேசிய RSB மீதே கோர்ட் நடவடிக்கை எடுத்ததில்லை.


முக்கிய வீடியோ