உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.ஏ.,வுக்கே முதல்வர் பதவி பா.ஜ.,தலைவர்கள் வலியுறுத்தல்

எம்.எல்.ஏ.,வுக்கே முதல்வர் பதவி பா.ஜ.,தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடில்லி:தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.,க்களில் இருந்தே ஒருவர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பா.ஜ.,வுக்குள் கோரிக்கை வலுத்துள்ளது.டில்லி சட்டசபைத் தேர்தல் கடந்த 5-ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடந்தது. மொத்தம் 70 தொகுதிகளில் பா.ஜ., 48 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது.தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. அதிலும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களே தோல்வியைத் தழுவினர்.இதையத்து, முதல்வர் ஆதிஷி சிங் தன் ராஜினாமா கடிதத்தை துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் நேற்று முன் தினம் சமர்ப்பித்தார்.ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார். இதனால், பிரதமர் 15ம் தேதி நாடு திரும்பியவுடனே, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து இறுதி செய்யப்படும்; அதன்பிறகே ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமை கோரும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், வடமேற்கு டில்லி பா.ஜ., - எம்.பி., யோகேந்திர சந்தோலியா நிருபர்களிடம் பேசும்போது, “தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.,க்களில் இருந்து ஒருவரையே முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். அதில், டில்லி பா.ஜ.,வின் முன்னாள் தலைவர்கள் இருவர், தேசிய செயலர் மற்றும் நீண்ட அரசியல் அனுபவமுள்ள முன்னாள் நிர்வாகிகள் உட்பட திறமையான தலைவர்கள் உள்ளனர். எனவே, எம்.எல்.ஏ., பதவியில் இல்லாத ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்குவதை கட்சி மேலிடம் தவிர்க்க வேண்டும்,”என்றார்.அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர், 'ஒரு எம்.எல்.ஏ.,வை முதல்வர் பதவிக்கு உயர்த்த வேண்டும். அப்படி செய்தால்தான் அது மக்களுக்கு செலுத்தும் மரியாதையாக அமையும். கடந்த 2008ம் ஆண்டு மூத்த தலைவரான லோக்சபா எம்.பி., விஜய்குமார் மல்ஹோத்ரா முதல்வராவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் தேர்தலில் பா.ஜ., தோல்வியைத் தழுவியத். ஆனாலும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக விஜய்குமார் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். அதற்காகவே அவர் தன் லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்'என்றார்.அதேநேரத்தில், புதுடில்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா மற்றும் புதுடில்லி லோக்சபா எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் ஆகிய இருவருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது என கட்சி நிர்வாகிகள் சிலர் கூறினர்.அதேபோல, டில்லி பா.ஜ., முன்னாள் தலைவர்கள் விஜேந்தர் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாயா ஆகியோரும் முதல்வர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.மேலும், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சியின் மூத்த தலைவர்களான ஆஷிஷ் சூட், பவன் ஷர்மா, ரேகா குப்தா மற்றும் ஷிக்கா ராய், அபய் வர்மா ஆகியோரும் முதல்வர் பதவியை குறிவைத்து மூத்த தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி