பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நெருங்கும் நிலையில், பூத் அளவில் வந்துள்ள அறிக்கை, பா.ஜ., தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இம்முறை கட்சிக்கு 17 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து, கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜ., லோக்சபா தேர்தலை தீவிரமாக கருதியது. மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, இலக்கு நிர்ணயித்தது. மிகவும் கவனத்துடன் வேட்பாளர்களை தேர்வு செய்தது. கட்சியின் பிரசாரமும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல முக்கிய தலைவர்கள், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்தினர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களும் பிரசாரம் செய்தனர். ம.ஜ.த., கூட்டணி
இம்முறை ம.ஜ.த.,வுடன் கைகோர்த்திருந்ததால், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும், கூட்டணி வேட்பாளர்களுக்காக பணியாற்றினர். மாநிலத்தில் 28 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என, பா.ஜ., எதிர்பார்த்தது. ஆனால் பூத் அளவில் வந்துள்ள அறிக்கை, பா.ஜ.,வின் துாக்கத்தை கெடுத்து உள்ளது.கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 என, இரண்டு கட்டங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பின் எத்தனை தொகுதிகளில் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ள, பூத் அளவில் பா.ஜ., ஆய்வு நடத்தியது. தற்போது, அந்த அறிக்கை வந்துள்ளது. அந்த அறிக்கை கட்சியின் பூத், தாலுகா, மாவட்ட தலைவர்கள், தொண்டர்களின் கருத்துகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.கட்சி எதிர்பார்த்தது போன்று, 28 தொகுதிகளில் வெற்றி சாத்தியம் இல்லை. 17 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள சில தொகுதிகளை இழக்க கூடும். ஐந்து தொகுதிகளில் 50 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ளது. இங்கு பா.ஜ., காங்கிரஸ் இடையே, சமமான போட்டி இருக்கும். ஆறு தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவது கஷ்டம்.பழைய மைசூரு பகுதியின் மைசூரு, மாண்டியா, சிக்கபல்லாபூர், கோலார், துமகூரு தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெறலாம். பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு ரூரல், பெங்களூரு சென்ட்ரல் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. 50 சதவீதம் வெற்றி
உடுப்பி - சிக்கமகளூரு, ஷிவமொகா, தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, ஹூப்பள்ளி - தார்வாட், பாகல்கோட், ஹாவேரி, விஜயபுரா தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பெலகாவி, தாவணகெரே, ஹாசன், கலபுரகி, பல்லாரி தொகுதிகளில், 50 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் சாம்ராஜ் நகர், சிக்கோடி, பீதர், ராய்ச்சூர், கொப்பால், சித்ரதுர்கா தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவது கஷ்டம். ம.ஜ.த., போட்டியிட்ட கோலார், ஹாசன், மாண்டியா தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் கட்சி வெற்றி பெறலாம். ஒரு தொகுதியில் இழுபறி இருக்கும். 50 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக, அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையால் பா.ஜ., தலைவர்கள் கவலையில் உள்ளனர். குறிப்பாக ஜெகதீஷ் ஷெட்டர், ஸ்ரீராமுலுவுக்கு இந்த தேர்தல் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாகும். சட்டசபை தேர்தலில் தோற்ற இவர்கள், மிகவும் போராடி லோக்சபா தேர்தலில் சீட் பெற்றனர். மற்றொரு முறை இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். எனவே நடுங்கும் இதயத்துடன், ஜூன் 4ம் தேதிக்காக காத்திருக்கின்றனர்.அதேபோன்று மாநில தலைவர் விஜயேந்திராவுக்கும், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலிடத்தின் உத்தரவுக்கு பணிந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர் எடியூரப்பா. இவரை ஓரங்கட்டியதால் லிங்காயத் சமுதாயத்தினர் அதிருப்தி அடைந்தனர். இதுவே சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமானது.எனவே பலரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அவரது மகன் விஜயேந்திராவை பா.ஜ., மேலிடம் மாநில தலைவராக்கியது. லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, உத்தரவிட்டிருந்தது.மாநில தலைவரான பின், விஜயேந்திரா எதிர்கொண்ட முதல் அக்னி பரீட்சை லோக்சபா தேர்தல். இதில் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே, பதவியை தக்க வைக்க முடியும். எடியூரப்பாவின் செல்வாக்கும் நிலைக்கும். தற்போது கிடைத்த அறிக்கை, இவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.