விஜயேந்திராவை நீக்க விருப்பமில்லாத பா.ஜ., மேலிடம்: அதிருப்தி கோஷ்டி கிலி
பெங்களூரு; அதிருப்தியாளர்களுக்கு பணிய வேண்டாம். தற்போதைக்கு மாநில தலைவரை மாற்றினால், தேன் கூட்டில் கை வைத்ததாக இருக்கும் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. எனவே மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பது சந்தேகம் என, தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக பா.ஜ.,வில், நாளுக்கு நாள் கோஷ்டி பூசல் அதிகரிக்கிறது. மாநில தலைவர் பதவியில் கண் வைத்துள்ள, பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், தன்னுடன் சில தலைவர்களை சேர்த்து கொண்டு, மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு குடைச்சல் கொடுக்கிறார். மனம் போனபடி கடுமையாக விமர்சிக்கிறார்.விஜயேந்திரா மாநில தலைவராக தொடருவதில், எத்னால் மட்டுமின்றி, ரமேஷ் ஜார்கிஹோளி, குமார் பங்காரப்பா, பிரதாப் சிம்ஹா உட்பட, சில தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. பதவியில் இருந்து இறக்கியே ஆக வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். சுறுசுறுப்பு
சமீபத்தில் கர்நாடகாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், தேர்தல் நடத்தி மாநில தலைவர் பதவியை மேலிடம் தேர்வு செய்யும் என, கூறினார். அதன்பின் எத்னால் கோஷ்டி சுறுசுறுப்படைந்தது. தங்களை சார்ந்த தலைவரை களமிறக்க வேண்டும் என, முடிவு செய்தனர். தானே வேட்பாளராக வாய்ப்பு கிடைக்கும் என, எத்னால் நம்பியுள்ளார்.இதற்கிடையே மாநில தலைவர் பதவிக்கு, தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., வரலாற்றில் மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்திய உதாரணம் இல்லை. இந்த சம்பிரதாயத்தை மாற்ற வேண்டாம் என, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஓட்டு சீட்டு மூலம், தலைவரை தேர்வு செய்யும்படி, மேலிடத்துக்கு சில தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். விஜயேந்திராவை எதிர்த்து திறமையான தலைவரை களமிறக்கி, வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது, எத்னால் கோஷ்டியின் எண்ணமாகும். இந்த எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. குழப்பம்
இதுவரை கட்சியில் இல்லாத சம்பிரதாயத்தை துவங்கினால், தேன் கூட்டில் கல்லெறிந்ததாக இருக்கும். தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்படலாம். எனவே ஒருமித்த கருத்துடன், விஜயேந்திராவை பதவியில் நீட்டிக்க வைப்பதில் மேலிடம் ஆர்வம் காட்டுகிறது. இதன் மூலம் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்பள்ளி வைப்பது, மேலிடத்தின் எண்ணமாகும்.இம்மாதம் இறுதி வாரத்தில், பல மாநிலங்களின் மாநில, மாவட்ட தலைவர்களின் பட்டியல் வெளியாகும். கர்நாடகாவுக்கு விஜயேந்திராவே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இவரை மாற்ற வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கும் எத்னால் கோஷ்டிக்கு பின்னடைவு ஏற்படலாம்.