எதிர்க்கட்சி தலைவர் அசோக் மீது பா.ஜ.,வினர் அதிருப்தி!: சட்டசபையில் பதிலடிக்கு திணறுவதாக ஆதங்கம்
பெலகாவி: சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் மீது பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். பெலகாவியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுங்கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விஷயத்தில் அசோக் திணறுவதாகவும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ.,வின் அசோக் உள்ளார். பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர், கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடருக்கு முன்பு காங்கிரஸ் அரசு மீது, 'முடா', வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு உட்பட, பல முறைகேடு புகார்கள் எழுந்தன. இது பற்றி சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., பெரிய அளவில் பிரச்னை எழுப்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இதுவரை நடந்த நான்கு நாட்கள் கூட்டத்தொடரில், எதிர்பார்ப்புகள் அனைத்தும் புஸ் என்று போய் விட்டது. அரசு மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விஷயத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் சோடை போய் உள்ளார். தவிடுபொடி
சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது, பஞ்சமசாலி சமூகத்தினர் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதை பெரிய பிரச்னையாக்கி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் திட்டம் வகுத்து இருந்தனர். ஆனால், அந்த திட்டம் அனைத்தும் தவிடுபொடியானது. இதற்கும் காரணம் அசோக் தான். பஞ்சமசாலிகள் மீதான தடியடி குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசமாக பேசி கொண்டு இருந்த போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் குறுக்கிட்டு, 'போலீசார் மீது கல்வீசியது ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் தான்' என்று கூறினார். இதற்கு அசோக் பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். அமைச்சர் கிண்டல்
பஞ்சமசாலி சமுதாயத்தினர் மீதான தடியடி பற்றி, சபையில் விவாதிக்க தங்களுக்கு அனுமதி தரவில்லை என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் காதர் மீது புகார் தெரிவித்தனர். சபாநாயகரிடம் சென்று பிரச்னை செய்யலாம் என்று எம்.எல்.ஏ.,க்கள் அழைத்த போதும், இரு மனதுடன் சபாநாயகர் அறைக்கு அசோக் சென்று உள்ளார். அரசு மீதுள்ள குற்றச்சாட்டுகள் பற்றியும், வலுவான ஆதாரங்களுடன் சபையில் பேச, அசோக் எந்த முயற்சியும் செய்யவில்லை. இது குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு சட்டசபையில் எப்படி செயல்படுவது என்று தெரியவில்லை. அவரது பலவீனத்தை காங்கிரஸ் நன்கு பயன்படுத்தி கொள்கிறது. இதனால் எங்களுக்கு சபையில் பேச, போதிய வாய்ப்பு கிடைப்பது இல்லை. சட்டசபைக்கு செல்லும் முன்பு, நாங்கள் கூட்டம் நடத்தி அரசுக்கு எதிராக போராடுவது குறித்து, ஒரு முடிவு எடுத்து செல்கிறோம்.ஆனால், சபையில் அதை செயல்படுத்துவதில், அசோக் தடுமாறுகிறார். ஒரு மூத்த அமைச்சர் எங்களிடம் வந்து, என்ன உங்கள் தலைவர் சபையில் இப்படி தடுமாறுகிறார் என்று கிண்டல் செய்கிறார். இதனால் எங்கள் சார்பாக சபையில் பேச, யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. வேறு வழி?
பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கும், அசோக்கிற்கும் இடையில் ஒருங்கிணைப்பு இல்லை. அசோக் முதல் வரிசையிலும், விஜயேந்திரா கடைசி வரிசையில் அமர்ந்து இருக்கின்றனர். சபை நடக்கும்போது அசோக்கிற்கு தேவையான ஆலோசனைகளை, விஜயேந்திரா வழங்குவது இல்லை. பஞ்சமசாலிகள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரம் குறித்து, எம்.எல்.ஏ., சுனில்குமார் தலைமையில் அரசுக்கு எதிராக சபையில் கேள்வி எழுப்ப முடிவு செய்தோம். ஆனால் அசோக் மூத்தவர் என்பதால், அவரே பேசட்டும் என்று சுனில்குமார் கூறிவிட்டார். நிலைமை இப்படியே சென்றால், சட்டசபையில் எங்கள் குரல் கண்டிப்பாக ஒடுக்கப்படும். இனிமேலாவது தவறுகளை திருத்தி கொண்டு, அரசுக்கு எதிராக சபையில் குரல் எழுப்புவதில் அசோக் கவனம் செலுத்த வேண்டும். மூத்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோற்ற பின், சட்டசபையில் வலுவாக பேசும் தலைவர் இல்லாத காரணத்தால், எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க பா.ஜ., மேலிடம் தாமதப்படுத்தியது. ஒருவழியாக வேறு வழியின்றி ஆறு மாதங்களுக்கு பின், எதிர்க்கட்சி தலைவராக அசோக் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.