அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜ., எம்.எல்.சி., கைது
பெங்களூரு: சட்டசபையில், கர்நாடக அமைச்சரை அவதூறாக விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பா.ஜ., எம்.எல்.சி., சி.டி.ரவியை போலீசார் கைது செய்தனர்.அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக, கர்நாடக சட்டமேலவையில் அமளி ஈடுபட்டது. அப்போது, காங்., பா.ஜ., உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, பா.ஜ., எம்.எல்.சி.,யான சி.டி.ரவி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை விமர்சித்து பேசினார். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, அமைச்சரை நோக்கி சி.டி., அவதூறாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து லட்சுமி ஹெபால்கர், அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, அவர் அவர் ஆலோசனை நடத்தினார்.இவ்விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையத் தொடர்ந்து சி.டி.ரவியை போலீசார் கைது செய்தனர்.