உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் அரசுக்கு எதிராக பா.ஜ.,போராட்டம்

பஞ்சாப் அரசுக்கு எதிராக பா.ஜ.,போராட்டம்

சண்டிகர்:'மத்திய அரசு திட்டங்களை, பஞ்சாபின் ஆளும் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்துவதில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கூட, வலுக்கட்டாயமாக நிறுத்தி விட்டது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது. பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான், முதல்வராக உள்ளார். அந்த அரசுக்கு எதிராக, மாநிலம் முழுவதும், பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பா.ஜ., தலைவர்கள், முதல்வர் பகவத் மான் மற்றும் அமைச்சர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர். முன்னதாக, மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர் தலைமையிலான கட்சியினர், பசில்கா மாவட்டத்தின் ராய்ப்பூர் கிராமத்திலிருந்து ஊர்வலமாக சென்ற போது, தடுத்து நிறுத்தப்பட்டார். கலா திட்டா டோல் பிளாசா அருகே, ஜாக்கர் மற்றும் பிற கட்சித் தலைவர்களை போலீசார் சிறை பிடித்தனர். அப்போது, சுனில் ஜாக்கர் பேசியதாவது: மாநிலத்தை ஆளும், ஆம் ஆத்மி அரசு, போலீசை வைத்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை நசுக்குகிறது. மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை, ஆம் ஆத்மி அரசு செயல்படுத்துவதில்லை. அதற்கான முகாம்களை கூட நடத்த விடுவதில்லை. இதன் மூலம், ஏழை மக்களுக்கு மிகப் பெரிய பாவத்தை ஆம் ஆத்மி செய்துள்ளது. இவ்வாறு சுனில் ஜாக்கர் பேசினார். மொஹாலி நகரில் நடந்த போராட்டத்திற்கு, பா.ஜ., தலைவர்கள் சுபாஷ் சர்மா, பர்மிந்தர் சிங் பிரார், சஞ்சீவ் விசிஸ்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய தலைவர்கள், 'மத்திய அரசின் திட்டங்களை பஞ்சாபில் செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட, 32 முகாம்களை மாநில அரசு தடை செய்துள்ளது. அந்த முகாம்களில் தகவல் திருட்டு நடப்பதாக, ஆம் ஆத்மி கூறியுள்ளதில் உண்மையில்லை' என்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி தலைவர்கள் நேற்று கூறுகையில்,'இந்த முகாம்களில் பொதுமக்களின் விவரங்களை சட்ட விரோதமாக பா.ஜ., சேகரித்து வருகிறது. அதனால் தான் அவற்றை தடை செய்துள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை