ஆம் ஆத்மி கட்சியின் ஊழலை விவரித்து பிரசார பாடல், போஸ்டர் பா.ஜ., வெளியீடு
புதுடில்லி:சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதலை பா.ஜ., மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.முதல்வராக இருந்த போது, கெஜ்ரிவால் தங்கியிருந்த அரசு பங்களா கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, அரண்மனை போல மாற்றியதக குற்றம் சாட்டும் பா.ஜ., அந்த பங்களாவை 'ஷீஷ் மஹால்' என கேலி செய்து வருகிறது. அந்த பங்களா குறித்து போஸ்டர் மற்றும் பாடலை தயார் செய்துள்ளது. இதுகுறித்து, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியின் முறைகேடுகளை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக,ம் 'ஷீஷ் மஹால் ஆப்தா பைலானே வாலோன் கா அடா' என்ற பாடலும் 'ஆப்தா -இ- ஆசம்' என்ற போஸ்டரும் வெளியிட்டுள்ளோம். இந்த போஸ்டரில் முகலாய மன்னர் உடையில் கெஜ்ரிவால் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதேபோல, 'பஹானே நஹி பத்லவ் சாஹியே, டில்லி மே பிஜேபி சர்கார் சாஹியே' (மாற்றம் தேவை; காரணங்கள் தேவையில்லை. டில்லிக்கு பா.ஜ., அரசு தேவை) என்ற என்ற பாடலும் வெளியிட்டுள்ளோம்.பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றிய ஆம் ஆத்மியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற டில்லி மக்கள் முடிவு செய்து விட்டனர். இந்தப் பிரசார பாடலை சமீபத்தில் ரோகிணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இப்போது அது தேர்தல் பிரச்சாரத்துக்காக சில மாற்றங்கள் செய்து வெளியிடப்பட்டுள்ளது.கெஜ்ரிவால் கட்சி அடிக்கும் கொள்ளையால் டில்லி மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். பா.ஜ., ஆட்சியை விரும்புகின்றனர். வடகிழக்கு டில்லியிலிருந்து மூன்று முறை தொடர்ந்து பா.ஜ., எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனோஜ் திவாரி, டில்லி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தப் பாடலை பாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஊழலை குறை சொல்லி, டில்லியை மாற்றிக் காட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், முதல்வர் பதவியை ஏற்றவுடன் அவருடைய குணம் மாறி விட்டது.இந்தப் பாடலில் கெஜ்ரிவாலின் ஊழல் மற்றும் மக்களின் வரிப் பணத்தில் அவருடைய ஆடம்பர வாழ்க்கையை விவரித்துள்ளோம். ஷீஷ் மஹால் டில்லி மாநகருக்கு ஒரு கறையாக மாறி விட்டது.சமீபத்தில் ரோகிணியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி டில்லிக்கு பேரழிவு,”என, கூறியிருந்தார்.மேலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்தவும் வேண்டுகோள் விடுத்தார். பா.ஜ.,வின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மி, 'பிரதமர் நரேந்திர மோடி வசிக்கும் அரசு பங்களாவின் ஆடம்பரம் மற்றும் விமானப் பயண செலவுகளை பட்டியலிட்டு அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறது.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து ஆம் ஆத்மி தீவிர பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ., இதுவரை 29 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இரண்டாவது பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல, ஆம் ஆத்மியும் பிரசாரத்தில், 'பிர் லயேங்கே கெஜ்ரிவால்' என்ற பாடலை ஒலிபரப்பி வருகிறது.