உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,

ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,

புதுடில்லி : 'ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் அவரது பழங்குடியின அடையாளத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'சத்தீஸ்கரில் உள்ள வனப்பகுதியில் பெரிய அளவு மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், பா.ஜ.,வின் தொழில் ரீதியான நண்பர்கள் லாபம் பெறுகின்றனர்.

கடும் கண்டனம்

திரவுபதி முர்மு மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை நாங்கள்தான் ஜனாதிபதி ஆக்கினோம் என, பா.ஜ., மார்தட்டுகிறது.நீங்கள்தான் ஜனாதிபதியாக்கினீர்கள் என்பது உண்மைதான். எதற்கு செய்தீர்கள்? எங்கள் நிலம், காடு, மரம், நீர் போன்றவற்றை அபகரிக்கவா? அதை அதானி, அம்பானி போன்றோர் இன்று ஆக்கிரமித்துள்ளனர்' என தெரிவித்தார். தன் பேச்சின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவை, 'முர்மா ஜி' என்றும், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, ராம்நாத் 'கோவிட் ஜி' என்றும் மாற்றி உச்சரித்தார். இந்நிலையில், கார்கேவின் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறியதாவது:

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிராக கார்கே பயன்படுத்திய வார்த்தைகள் கடும் ஆட்சேபனைக்குரியவை. காங்கிரஸ் கட்சியின் மரபணுவிலேயே பழங்குடியின விரோத மனப்பான்மை உள்ளது என்பதை இது காட்டுகிறது.

பகிரங்க மன்னிப்பு

நிலம் மற்றும் வளங்களை, ஜனாதிபதி பறிப்பதாக பொருள்படும் வகையில் கார்கேவின் பேச்சு அமைந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் அவர் அவமதித்துள்ளார். இது, தலித் விரோத மனப்பான்மை. ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அவர் செய்வாரா? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
ஜூலை 09, 2025 14:56

ஒரு பெண்ணை அதுவும் பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவரை தரக்குறைவாக பேசியதற்கு நேரடியாக ஒரு வழக்கு தொடுக்கலாமே? அதை விட்டுவிட்டு மன்னிப்பு அது இதுணுக்கிட்டு


R.RAMACHANDRAN
ஜூலை 09, 2025 07:56

இந்த நாட்டில் குடியரசுத் தலைவர்கள் யாராக இருந்திருந்தாலும்/இருந்தாலும் அரசியல் அமைப்பின் படியான கடமைகளை செய்தது/செய்யவிடுவது இல்லை.இதனால் மக்களுக்கு ஆளுபவர்கள் நல்லாட்சி செய்தது/செய்வது இல்லை.ஒரு சிலரை வாழ்விக்க பலரின் அடிப்படை உரிமைகளை பறித்துக் கொண்டுள்ளனர்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 06:10

இவனும் இவன் மகனும் பெண்களை இன்னமும் மட்டமாக தான் பார்க்கிறார்கள் , இவர்கள் இருக்கும் காங்கிரசிற்கு பெண்கள் வோட்டு போடுவது என்பது இந்த காமுகர்களின் பேச்சை ஆதரிப்பது போலத்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை