பா.ஜ., ரவி எங்கள் அமைச்சரை ஆபாசமாக திட்டியதற்கு ஆதாரம் உள்ளது!: வழக்குக்கு பயந்து முதல்வர் சித்தராமையா அவசர பேட்டி
கலபுரகி: காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் - பா.ஜ., எம்.எல்.சி., ரவி மோதல் விவகாரம் முதல்வர் தலையிடும் அளவுக்கு சூடுபிடித்துள்ளது. தங்களுக்கு ஏதாவது பிரச்னை எழும் என பீதி அடைந்துள்ள முதல்வர் சித்தராமையா, 'லட்சுமியை ஆபாசமாக திட்டியதற்கு ஆதாரம் உள்ளது' என்று அவசர, அவசரமாக கூறியதையும் எதிர்க்கட்சியினர் கிண்டல் அடித்துள்ளனர்.பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 19ம் தேதி நிறைவு பெற்றது. அம்பேத்கர் பற்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை கண்டித்து, அன்றைய தினம் காலையில், மேல் சபையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலடியாக பா.ஜ., உறுப்பினர்களும் போராட்டம் நடத்தினர்.அப்போது பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பார்த்து, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாசமாக திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. லட்சுமி அளித்த புகாரில் ஹிரேபாகேவாடி போலீசார், ரவியை கைது செய்தனர்.அவரை கானாபுரா, நந்தகாடா, ராமதுர்கா போலீஸ் நிலையங்களுக்கும், கரும்பு தோட்டம், கல்குவாரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். தன்னை கொல்ல சதி நடப்பதாக ரவி குமுறினார். விடுவிக்க உத்தரவு
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்ய கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி உமா, 'ரவி எங்கிருந்தாலும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு சென்ற ரவி, தன்னை என்கவுன்டர் செய்ய, போலீசார் திட்டமிட்டு இருந்ததாக பகீர் குற்றச்சாட்டைக் கூறினார்.இதேபோன்று, தனக்கும் இந்த சந்தேகம் இருப்பதாக, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும், நேற்று கூறினார். ரவி, பிரஹலாத் ஜோஷியின் கருத்துகள், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூத்த அமைச்சர்
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''ரவியை கைது செய்து பல போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றது பற்றி, தன்னிடம் எந்த தகவலும் இல்லை,'' என்றார். இதனால் பா.ஜ., தலைவர்கள் கொந்தளித்தனர்.அவர்கள், 'தன் துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், பரமேஸ்வர் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். மூத்த அமைச்சர் ஒருவரும், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திராவும் சுவர்ண விதான் சவுதாவில் வைத்து விவாதித்து உள்ளனர். அதன்பின் தான் ரவி கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.“அமைச்சர் லட்சுமியை, நான் ஆபாசமாக திட்டவே இல்லை. ஆனாலும் என்னை கைது செய்து தொந்தரவு கொடுத்தனர்,” என, ரவி திரும்ப, திரும்ப கூறி வருகிறார். நீதி விசாரணை
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியும், லட்சுமி பற்றி ரவி ஆபாசமாக பேசியதாக ஆடியோ, வீடியோவில் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறி இருந்தார்.கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரம் குறித்து, கலபுரகியில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''எங்கள் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பார்த்து, பா.ஜ.,வின் ரவி ஆபாசமாக பேசியதற்கு ஆடியோ, வீடியோ ஆதாரம் உள்ளது. ''அவர் ஆபாசமாக பேசியதை எங்கள் எம்.எல்.சி.,க்கள் கேட்டுள்ளனர். ரவி அப்படி பேசியது கிரிமினல் குற்றம். இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது நீதி விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று, பா.ஜ.,வினர் கேட்பது ஏன் என்று தெரியவில்லை?'' என்றார். கேள்விக்கணைகள்
ரவி ஆபாசமாக பேசியதாக, இதுவரை எந்த ஆதாரமும் வெளியாகவில்லை. ஆனாலும் அவரை போலீசார் கைது செய்தனர். இதை வைத்து எதிர்க்கட்சியினர் விடாப்பிடியாக கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். இதனால் வழக்கிற்கு பயந்து, முதல்வர் சித்தராமையா அவசரமாக விளக்கம் அளித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.ஒருவேளை ரவி, லட்சுமியை ஆபாசமாக பேசவில்லை என்று தெரியவந்தால், ஆளுங்கட்சியின் மீது கரும்புள்ளி விழும். அப்போது தங்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்வர் என்று, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.இவ்விஷயத்தை சும்மா விடுவதில்லை என்பதில் பா.ஜ., தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.