பெங்களூரு : முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் செல்வாக்கை குறைத்து, அவரை ஓரங்கட்ட வேண்டுமென, பா.ஜ., தேசிய ஒருங்கிணைப்பு செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்துள்ளது.கர்நாடகாவில் 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், தொங்கு சட்டசபை அமைந்தபோது, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவு தலைவர்கள், காங்கிரஸ், ம.ஜ.த.,வின் 17 எம்.எல்.ஏ.,க்களை ஈர்த்து, கூட்டணி அரசை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்தினர். எடியூரப்பா முதல்வரானார்.பா.ஜ., அரசுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள், தேசிய ஒருங்கிணைப்பு செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட, சில தலைவர்கள் திரைமறைவில் காய்கள் நகர்த்தி, எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கினர். பா.ஜ., மேலிடத்தின் நம்பிக்கையை பெற்று, கர்நாடக பா.ஜ.,வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது அவர்களின் கை ஓங்கியிருந்தது. புறக்கணிப்பு
கடந்த சட்டசபை தேர்தலின்போது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, பிரசாரம் உட்பட, அனைத்து விஷயங்களிலும், எடியூரப்பாவை விலக்கி வைத்தனர். பிரசாரத்திலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.லிங்காயத் சமுதாயத்தினர் கொதிப்படைந்ததால், கடைசி நேரத்தில் பிரசாரம் செய்ய அவரை அழைத்தனர். அவரும் பெயரளவுக்கு பிரசாரம் செய்தார். ஷிகாரிபுரா தொகுதியில், தன் மகன் விஜயேந்திராவுக்கு சீட் பெற, பா.ஜ., மேலிடத்திடம் எடியூரப்பா, அதிகம் போராட வேண்டி இருந்தது.எடியூரப்பாவை ஓரம் கட்டுவதாக, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர். சந்தோஷ், பிரஹலாத் ஆகியோரின் அறிவிக்கப்படாத தலைமையில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்தது. சந்தோஷ், ஜோஷி முயற்சி பலனளிக்கவில்லை.சட்டசபை தேர்தல் தோல்விக்கு எடியூரப்பாவை ஓரங்கட்டியதே காரணம் என, அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். அதன்பின் சூழ்நிலையை உணர்ந்த பா.ஜ., மேலிடம், எடியூரப்பாவுக்கு மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியது. சட்டசபை தலைமை கொறடா பதவியாவது கிடைக்குமா என, எதிர்பார்ப்பில் இருந்த விஜயேந்திராவை, கர்நாடக பா.ஜ., தலைவர் பதவியில் அமர்த்தியது. விஜயேந்திரா சுறுசுறுப்பு
கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி வரும் விஜயேந்திரா, தனக்குள்ள சக்தியுடன், தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி, கட்சியை பலப்படுத்துகிறார். பதவியேற்ற கையோடு, அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து, ஆசி பெற்றார். முக்கியமான மடங்களுக்கு சென்று ஆதரவு திரட்டுகிறார். பம்பரமாக சுழன்று கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக பா.ஜ.,வை தன் கைப்பிடியில் கொண்டு வந்துள்ளார்.சட்டசபை தேர்தலில், சந்தோஷ், ஜோஷியின் திட்டங்கள் பயனளிக்காததால் வெறுப்படைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா தேர்தலில் கர்நாடக தொடர்பாக ஆலோசனைகள் கூறுவது, முடிவுகள் எடுக்கும் பொறுப்பில் இருந்து, சந்தோஷ், ஜோஷியை முற்றிலுமாக விடுவித்தனர். லோக்சபா தேர்தல் பொறுப்பு, எடியூரப்பாவிடம் சென்றுள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பாவிடம், கர்நாடக பொறுப்பு அளிக்கப்பட்டது. அப்போதைய தேர்தலில் 28 லோக்சபா தொகுதிகளில், 25ல் பா.ஜ., வெற்றி பெற்றது. முதல்வர் பதவியை இழந்தாலும் கூட, மாநில சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்துவதில், எடியூரப்பா ஆர்வம் காண்பித்தார். ஆனால் சந்தோஷ், ஜோஷியின் தலையீட்டால், பா.ஜ., மேலிடம், சுற்றுப்பயணத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. தலைகீழ் மாற்றம்
ஆனால் இப்போது சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது. லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டும் பொறுப்பை, எடியூரப்பாவிடம் ஒப்படைத்துள்ளது. மகன் மாநில தலைவரான பின், எடியூரப்பா குஷியோடு கட்சி பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது கட்சியே தனக்கு முக்கியத்துவம் அளிப்பதால், அவரது உற்சாகம் அதிகரித்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டங்கள் வகுப்பது உட்பட, முக்கிய முடிவுகள் எடுக்கும் சுதந்திரத்தை எடியூரப்பாவுக்கும், அவரது மகனுக்கும் பா.ஜ., மேலிடம் அளித்துள்ளது. அவர்களும் முதற்கட்டமாக, கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்களை, மீண்டும் பா.ஜ.,வுக்கு அழைத்து வருவதில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.இவர்களின் முயற்சியால், ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வுக்கு திரும்பியுள்ளார். இவர் பா.ஜ.,வுக்கு வருவதைத் தடுக்க, ஜோஷி இறுதி கட்டம் வரை கடுமையாக முயற்சித்தார். ஆனால் பலனளிக்கவில்லை. பாடம் கற்பிக்க முடிவு
ஷெட்டர் கட்சியை விட்டுச் சென்றதால், கட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம், அவர் திரும்புவதால் ஏற்படும் அனுகூலம் குறித்து, எடியூரப்பாவும், விஜயேந்திராவும் விவரித்ததால், ஷெட்டரை பா.ஜ.,வில் சேர்க்க சம்மதித்தது.இதேபோன்று, லட்சுமண் சவதி உட்பட, சந்தோஷ், ஜோஷியால் கட்சியை விட்டு சென்றவர்களை அழைத்து வர, எடியூரப்பா முயற்சிக்கிறார். பா.ஜ.,வின் முதுகெலும்பாக நிற்கும், லிங்காயத் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கிறார்.கர்நாடகா பா.ஜ.,வில், எடியூரப்பா கை ஓங்கியுள்ளது. இவரை ஓரங்கட்ட வேண்டும் என்ற, சந்தோஷ், பிரஹலாத் ஜோஷி பின்னடைவை சந்தித்துள்ளனர்.இதற்கிடையில், ஜெகதீஷ் ஷெட்டரும், பிரஹலாத் ஜோஷிக்கு பாடம் புகட்ட தயாராகிறார். சட்டசபை தேர்தலில், தனக்கு சீட் கை நழுவ செய்து, கட்சியை விட்டு வெளியேறும்படி செய்த, ஜோஷியின் தார்வாட் தொகுதியிலேயே களமிறங்க வேண்டும் என, ஷெட்டர் சபதம் செய்துள்ளார்.