பிரிஜ்ஜில் எட்டு மாதமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு
போபால்: திருமணத்துக்கு வற்புறுத்தியதால், தன்னுடன் வாழ்ந்து வந்த காதலியை கொன்ற ஏற்கனவே திருமணமான நபர், உடலை பிரிஜ்ஜில் எட்டு மாதங்களாக அடைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் தேவாசில், ஒரு வாடகை வீட்டின் ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வெளியானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பிரிஜ்ஜில், ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. சேலை அணிந்திருந்த நிலையில், அந்தப் பெண்ணின் கைகள் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் சுருக்கு கயிறு இருந்தது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுடன் 'லிவ் இன்' முறையில் வாழ்ந்து வந்த, திருமணமான நபரே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது:இந்துாரைச் சேர்ந்த சஞ்சய் படிதார் என்பவர், 30 வயதுள்ள பெண்ணுடன் இந்த வீட்டில், 2023ல் வாடகைக்கு வந்தார். கடந்தாண்டு ஜூனில் வீட்டை காலி செய்வதாகவும், ஒரு அறையில் மட்டும் தன் பொருட்களை வைத்து செல்வதாகவும் சஞ்சய் படிதார் கூறியுள்ளார்; அவ்வப்போது வந்து தன் அறையில் உள்ள பொருட்களை பார்த்துச் செல்வார்.இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர், அந்த அறைக்கான மின்சார இணைப்பை சில தினங்களுக்கு முன் துண்டித்துள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள், துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறியுள்ளனர்.பூட்டப்பட்டிருந்த அறைக்குள், பிரிஜ்ஜில் அந்தப் பெண்ணின் உடல் கிடந்தது. அவர், கடந்தாண்டு ஜூனில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கடந்த எட்டு மாதங்களாக, அவருடைய உடல் பிரிஜ்ஜில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே திருமணமான சஞ்சய் படிதார், பிங்கி பிரஜாபதி என்ற அந்தப் பெண்ணுடன், இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.அந்த அறைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இந்தக் கொலை சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. சஞ்சய் படிதாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.