கல்லூரி, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நொய்டா:பிரபல கல்லூரி மற்றும் இரண்டு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக 'இ - மெயில்' வாயிலாக மிரட்டல் வந்தது. சோதனை நடத்தியதில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.டில்லி பல்கலையின் கீழ் இயங்கும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, மயூர் விஹார் அல்கான் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் நொய்டா ஷிவ் நாடார் பள்ளி ஆகியவற்றுக்கு நேற்று வந்த இ - மெயிலில், கல்வி நிறுவன வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.போலீஸ், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படைப் பிரிவினர் மூன்று கல்வி நிறுவனங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு காலை 7:42 மணிக்கும் அல்கான் சர்வதேச பள்ளிக்கு காலை 6:40 மணிக்கும் இந்த இ - மெயில்கள் வந்திருந்தன.இந்தப் புரளி காரணமாக கல்லூரி மற்றும் இரண்டு பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.மிரட்டல் விடுத்தவர் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.