கட்டுக் கட்டாக போனஸ்; கண் கலங்கிய ஊழியர்கள்
சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு!
மும்பையைச் சேர்ந்த த்ரிஷ்டி, வீடு திரும்பியபோது, தன் வீட்டு முன் போட்டிருந்த ரங்கோலி கோலம் சற்று மாறியிருப்பதைக் கண்டார். 'சிசிடிவி' பதிவைப் பார்த்தபோது, பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் தவறுதலாக அதை மிதித்துவிட்டதும், அதை அப்படியே விட்டுச் செல்லாமல் அவரே அருகில் அமர்ந்து கவனமாகச் சரி செய்ததும் தெரிந்தது.யாரும் கேட்காமலேயே சரிசெய்த அந்த ஊழியருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் த்ரிஷ்டி. பொறுப்புடன் நடந்துகொண்ட ஊழியரை இணையவாசிகளும் பாராட்டினர். 'சிறு கருணைச் செயல்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும்' என்றும், பலர் கமென்ட் செய்துள்ளனர்.கட்டுக் கட்டாக போனஸ்; கண் கலங்கிய ஊழியர்கள்
குஜராத்தின் சூரத்தில் ஜவுளி நிறுவனம் நடத்தும் ராம்ஸ்வரூப் முண்டே, தன் 20 ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக தலா, 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கம் வழங்கிய வீடியோ வலைதளங்களில் பரவுகிறது. இனிப்பு, உலர் பழப் பெட்டிகளுக்குப் பதிலாக, புதிய ரூபாய் நோட்டுக் கட்டுகளை, ஊழியர்களுக்கு அவரது மனைவி வழங்குகிறார்.பெற்றுக்கொண்ட ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்கினர். 'ஊழியர்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதி. அவர்கள் எந்த கவலையும் இன்றி தீபாவளியைக் கொண்டாட வேண்டும்' என்கிறார், முண்டே. 'இவரது நிறுவனத்தில் வேலைக்கு சேருவது எப்படி' என்று கமென்ட் செய்துள்ளனர், வலைதள பிரியர்கள் சிலர்.ஆசிரியரை கண்டதும் நெகிழ்ச்சி; ஆனந்தக்கண்ணீரில் மாணவர்
'பாம்பே ஷேவிங் கம்பெனி' நிறுவனர் சாந்தனு தேஷ்பாண்டே, 21 ஆண்டுக்குப் பின் தன் முன்னாள் கணித ஆசிரியரை சந்தித்த வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. தன்னை நேரில் கண்டதும், கண் கலங்கி பேச முடியாமல் நிற்கும் சாந்தனுவை கட்டி அணைத்துக் கொள்கிறார், ஆசிரியர் ஜே.ஜே. அகர்வால்.நட்சத்திரக் கடலாக மின்னியது சென்னை
ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த சென்னை நகரம், நட்சத்திரங்கள் நிறைந்த வானம் போல காட்சியளிக்கிறது. தீபாவளி நாளன்று வீடுகளும் தெருக்களும் ஒளிர்ந்த இந்த அற்புதக் காட்சியை, விமானி பிரதீப் கிருஷ்ணன் படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.ஓட்டத்தில் ஒரு ஆட்டம்; சாதனை படைத்த ஷோலே
பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் ஷோலே, ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டே நான்கு புதிர் 'கியூப்'களைத் தீர்த்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கனடாவின் டொராண்டோவிலுள்ள சென்ட்ரல் டெக் உயர்நிலைப் பள்ளியில், காற்று வீசிய சூழலிலும், 5 நிமிடம் 9.25 விநாடிகளில் இதை முடித்தார். ஒவ்வொரு, 400 மீட்டர் சுற்றுக்கு முன்பும் ஒரு 'கியூப்' புதிருக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்தார்.