மும்பையில் தீ விபத்து சிறுவன் பலி
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 வயது சிறுவன் உயிரிழந்தான். மக்கள் நெரிசல் மிகுந்த மும்பையில், 'சால்' எனப்படும், அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. ஒரே சாலில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும். இதனால், அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பது வழக்கம். அந்தவகையில், மும்பையின் கபே பரேட் பகுதியில் உள்ள ஒரு சாலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4:15 மணிக்கு, கேப்டன் பிரகாஷ் பெத்தே மார்க்கில் உள்ள சிவசக்தி நகரில் உள்ள ஒரு சாலின் முதல் தளத்தில் சிறிய அறையில் தீப்பிடித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வாகன பேட்டரிகள், வீட்டு உபயோக பொருட்களில் தீ பரவியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. ஆனால் தீயில் கருகி, 15 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.