விஷம் கொடுத்து காதலன் கொலை: காதலி, உறவினர் குற்றவாளி என தீர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலி, அவரது மாமா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாததால், காதலியின் தாய் விடுவிக்கப்பட்டார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ், 23, ரேடியாலஜி படித்து வந்தார். இந்த பகுதி, தமிழக - கேரள எல்லையில் அமைந்துஉள்ளது. திருமண ஏற்பாடு
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமவர்மஞ்சிராய் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற பெண்ணை, ஷாரோன் ராஜ் காதலித்தார். தனக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், தன்னுடன் பழகுவதை நிறுத்தும்படி ஷாரோன் ராஜிடம் கிரீஷ்மா பலமுறை கூறியதாகவும், அதை அவர் கேட்காமல் தொடர்ந்து காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கிரீஷ்மாவை சந்திக்க ராமவர்மஞ்சிராய் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு, கடந்த 2022 அக்., 14ல் ஷாரோன் ராஜ் சென்றார். அப்போது அவருக்கு, ஆயுர்வேத கஷாயம் எனக் கூறி, பூச்சிக்கொல்லி கலந்த கஷாயத்தை கிரீஷ்மா கொடுத்தார். இதை குடித்த ஷாரோன் ராஜ், சில மணி நேரங்களிலேயே நோய்வாய்ப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடலுறுப்புகள் செயலிழப்பால் அக்., 25ல் உயிரிழந்தார்.பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாரோன் ராஜ் ஆசிட் போன்ற திரவத்தை குடித்ததால், உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோரை கைது செய்தனர். அதிருப்தி
விசாரணையில், ஷாரோன் ராஜை கொலை செய்ய, கிரீஷ்மா ஐந்து முறை முயன்றதும், இதற்கு அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. மேலும், சம்பவம் நடப்பதற்கு முன், விஷம் கலந்து கொடுத்து எப்படி கொலை செய்யலாம்; அதற்கான தண்டனை விபரங்கள் குறித்து, கூகுளில் கிரீஷ்மா தேடி உள்ளார். இதை எல்லாம் ஆதாரங்களாக வைத்து, அவரையும், அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாட்டிங்கரா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கிரீஷ்மா, அவரது மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது.போதிய ஆதாரங்கள் இல்லாததால், கிரீஷ்மாவின் தாய் சிந்து, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.கிரீஷ்மா, நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையே, சிந்து விடுவிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த ஷாரோன் ராஜ் குடும்பத்தினர், இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறினர்.