மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
புதுடில்லி:மூளைச்சாவு அடைந்த 46 வயது பெண் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டது. இதனால் பலருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.ஷாலிமார் பாக் போர்டிஸ் மருத்துவமனையில் மார்ச் 19ம் தேதி 46 வயது பெண் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும் மார்ச் 27ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அந்தப் பெண் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அந்தப் பெண் உடல் மருத்துவ ஆய்வு செய்யப்பட்டது. சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை வெற்றிகரமாக மாற்ற முடியும் என, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ராகேஷ் துவா தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஷாலிமார் பாக் போர்டிஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், ஹரியானா மாநிலம் குருகிராம் போர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போர்டிஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு மூத்த டாக்டர் பங்கஜ் குமார், “மூளைச் சாவு அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் எடுத்த இந்த முடிவு பலரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், ஒரு தாராள மனப்பான்மை சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியது,”என்றார்.தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் விதிமுறைப்படி, ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் உறுப்பு தானம் குறித்து நோயாளியின் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.