குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, கிடைப்பது உரிமை!: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கொச்சி: 'அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்படி, தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும், குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை. அதனால், பால் குடிக்கும் குழந்தை, தாயின் பராமரிப்பில் இருப்பதே முறையாக இருக்கும்' என, வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் குழந்தை பெற்ற இளம்பெண், வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். தன், 16 மாத குழந்தையை அவர் பராமரித்து வந்தார்.இந்நிலையில், அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரை விசாரித்த கொச்சி குழந்தை நலக்குழு, குழந்தையை பராமரிக்கும் உரிமையை தந்தைக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது. ஒருதலைபட்சம்
இதை எதிர்த்து அந்த இளம்பெண், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், பிறப்பித்த உத்தரவு:குழந்தை நலக்குழுவின் உத்தரவை பார்க்கும்போது, அதன் உறுப்பினர்கள் ஒருதலைபட்சமாக நடந்துள்ளதையே காட்டுகிறது. குழு உறுப்பினர்கள் ஏற்கனவே எடுத்த தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே, தாயிடம் குழந்தை இருப்பது பாதுகாப்பற்றது என்று உத்தரவில் கூறியுள்ளனர்.இந்த குழுவின் ஒரே கவலை, குழந்தையின் நலனாக இருந்திருக்க வேண்டும். இந்த குழந்தையின் தாய், தன் கணவரைத் தவிர மற்றொருவருடன் வாழ முடிவு செய்துள்ளது குறித்து இந்த குழு கவலைப்பட வேண்டியதில்லை.அப்பெண்ணின் தனிப்பட்ட நடவடிக்கைகள் ஒழுக்கமற்றவை என்று குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், அவர் மோசமான தாயாக இருப்பார் என்று எப்படி முடிவு செய்ய முடியும்?ஒருவரின் நடத்தை குறித்த தனிப்பட்ட கருத்து, எப்போதும் தவறான தீர்ப்பையே வழங்கும். இதுவே, இந்தக் குழுவின் உத்தரவிலும் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு
தன் கணவரை விட்டு வெளியே சென்றபோதும், தன் குழந்தைக்கு அந்த பெண் தொடர்ந்து பாலுாட்டி வந்துள்ளார். இந்த உண்மையை, குழந்தை நலக்குழு கவனிக்கத் தவறிவிட்டது.ஒரு தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும், ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதும், அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவின்படி வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி.பெற்றோர் இருவரின் பராமரிப்பு கிடைக்காத நிலையிலேயே, குழந்தையின் பராமரிப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதை குழந்தை நலக்குழு முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் இருக்கையில், தாயிடம் இருப்பதே குழந்தையின் நலனுக்கு சிறந்தது. அதுவும், பால் குடிக்கும் வயதில் உள்ள குழந்தைகள், தாயிடம் இருப்பதே சரி.அந்த வகையில், இந்த பிரச்னையில், குழந்தை நலக் குழுவின் உத்தரவு சட்டத்துக்கு எதிரானது. எனவே அது தள்ளுபடி செய்யப்படுகிறது. குழந்தை, தாயிடமே இருக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.