சொத்து தகராறில் அண்ணன் சுட்டுகொலை
துவாரகா: சொத்து தகராறில் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.துவாரகா பகுதியின் மதியாலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மிந்தர் தலால், 35. இவரது இளைய சகோதரர் ரவீந்தர் தலால். இவர்களுக்கு சொந்தமாக பூர்விக சொத்துக்கள் இருந்தன. இவற்றை பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.கிராம பஞ்சாயத்தில் இதுதொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது. எனினும் அது தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, தர்மிந்தரை சந்தித்து, வாடகை வருவாயை பிரிப்பது தொடர்பாக ரவீந்தர் பிரச்னை செய்தார்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தர்மிந்தரை ரவீந்தர் சுட்டார். இதில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், ரவீந்தரையும், அவரது கூட்டாளிகளான சதீந்தர், ஜாஹித், அம்னீஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.