உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒற்றுமையாக விவசாயம் செய்யும் சகோதரர்கள்

ஒற்றுமையாக விவசாயம் செய்யும் சகோதரர்கள்

இன்றைய காலத்தில் 1 அடி நிலம், இடத்துக்காக சகோதரர்கள் இடையில் சண்டை ஏற்படுகிறது. நீயா, நானா என போட்டி போடுகின்றனர். சில சமயங்களில் இட பிரச்னையில் அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கின்றன. ஆனால் பெலகாவியில் சகோதரர்கள் ஐந்து பேர் ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்கின்றனர். ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.பெலகாவியின் சிக்கோடியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த், அனில், ஜோதிபா, ஸ்ரீதர், மாருதி. இவர்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் விவசாய நிலம், சிக்கோடி ரூரல் பகுதியில் உள்ளது. இதில், 12 ஏக்கரில் கரும்பு, 4 ஏக்கரில் வெற்றிலை, 2 ஏக்கரில் மிளகாய், 2 ஏக்கரில் காய்கறிகள், 100க்கும் மேற்பட்ட தென்னை, மா, கொய்யா மரங்கள், கோதுமை, சோளம், கொண்டை கடலை சாகுபடி செய்து விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். போதுமான லாபமும் ஈடுபட்டுகின்றனர்.

ஒற்றுமை

குடும்பத்தின் மூத்தவர் ஸ்ரீகாந்த் பெருமையுடன் கூறியதாவது:நானும், என் சகோதரர்கள் நான்கு பேரும் சிறு வயதில் இருந்தே ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த சண்டையும் வந்தது இல்லை. எங்கள் மனைவியரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் 20 பேர் இருக்கிறோம். விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை எடுக்க, எங்கள் நிலத்தில் நான்கு கிணறுகள் அமைத்துள்ளோம். சொட்டுநீர் பாசன முறையில் பயிர்களுக்கு தண்ணீர் எடுக்கிறோம். இதனால் கோடைகாலத்தில் கூட, தண்ணீருக்கு பிரச்னை இல்லை.தற்போது, 1 ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளோம். அறுவடை முடியும்போது, 30 டன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கரும்பு, வெற்றிலை, காய்கறிகள், கொய்யா, மா மரங்கள் உட்பட விவசாய சாகுபடி பொருட்கள் மூலம், ஆண்டிற்கு எங்களுக்கு 80 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நாங்கள் வேலை ஆட்களை அழைப்பது இல்லை.

சாண உரம்

எங்கள் குடும்ப உறுப்பினர்களே முழுக்க, முழுக்க விவசாய பணிகளை கவனிக்கிறோம். வீட்டில், 20 எருமை மாடுகள், ஐந்து நாட்டு பசுக்கள், 12 ஆடுகள் வளர்க்கிறோம். கால்நடைகளின் சாணத்தை விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்துகிறோம். செயற்கை உரங்கள் பயன்படுத்துவது இல்லை.விவசாயம் செய்வது மன அமைதி தருகிறது. உடல் அமைப்பை வலுப்படுத்துகிறது. விவசாயம் எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டால், விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேறலாம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ