சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை
ஜூரிச், நவ. 9-பெண்கள் புர்கா அணிய தடை விதித்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடும் ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. இதன்படி, முகம் மற்றும் தலையை மறைக்கும் 'ஹிஜாப்' எனப்படும் துணியை பெண்கள் பயன்படுத்த வேண்டும். இதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் 'புர்கா'வுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம், 2021ல் நிறைவேற்றப்பட்டது. இது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விமானங்களுக்குள், துாதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது. வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்து கொள்ளலாம்; ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக் கூடாது.தடையை மீறுபவர்கள் உடனடியாக, 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால், அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த தடைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அங்குள்ள மக்கள்தொகையில், 45 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பெரும்பான்மையாக துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவாவை பூர்வீகமாக கொண்டவர்கள் வசித்து வருகின்றனர்.