விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற தொழிலதிபர் சிக்கினார்
புதுடில்லி:சொகுசு காரில் ஹோட்டல் மேலாளரை மோதி விட்டு நிற்காமல் சென்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். புதுடில்லி கிரேட்டர் கைலாஷில் வசிப்பவர் கவுரவ் பரத்வாஜ், தொழிலதிபர். கடந்த 15ம் தேதி அதிகாலை தன் சொகுசு காரில் சென்றார். தென்மேற்கு டில்லி வசந்த் விஹார், ராவ் துலா ராம் மேம்பாலத்தில், தன் காரில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்த ஹோட்டல் மேலாளர் மயங்க் ஜெயின் மீது, கவுரவ் கார் மோதியது. விபத்து ஏற்பட்டவுடன் கவுரவ் தன் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். காயம் அடைந்த மயங்க் ஜெயின், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த வசந்த் விஹார் போலீசார், 200க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் கண்ணாடி துகள்கள் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின், கிரேட்டர் கைலாஷில் கவுரவ் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். விபத்தில் சேதம் அடைந்த கண்ணாடியை உடனடியாக மாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது. கவுரவ் பரத்வாஜிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.