கவர்னர் அதிகாரம் பறிப்பு; அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு; கவர்னருக்குள்ள அதிகாரத்தை, முதல்வருக்கு மாற்ற அனுமதி அளிக்கும் கர்நாடக பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கர்நாடக அமைச்சரவை கூட்டம், பெங்களூரின் விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பல்கலைக்கழக திருத்த மசோதா, பல்கலைக்கழக திருத்த மசோதா, பெங்களூரு மாநகராட்சி திருத்த மசோதா, சுற்றுலாத்துறை ரூப்வேஸ் மசோதா உட்பட ஒன்பது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.இதுவரை, கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் பல்கலைக்கழக துணை வேந்தராக, கவர்னர் இருந்தார்.பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், கவர்னரின் அதிகாரம் திரும்ப பெறப்பட்டதால், இனி முதல்வரே துணை வேந்தராக இருப்பார்.நிலத்தடி நீர்மட்டம் விதிமுறை மற்றும் மேம்பாட்டு திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆழ்துளை கிணறு செயல்படவில்லை என்றால், அதை மூடுவது கட்டாயம். ஒருவேளை மூடாவிட்டால், சம்பந்தப்பட்டோரை தண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் மசோதாவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.சாணக்யா பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அரசு அதிகாரியை பொறுப்பாளராக நியமிக்க, மசோதாவில் வாய்ப்புள்ளது.கர்நாடக தொழிலாளர் நல நிதி திருத்த மசோதா - 2024க்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் தொழிலாளர் நல நிதி சேகரிப்பு அதிகரிக்கும். மைசூரின், லலிதமஹால் ஹோட்டலை பழுது பார்க்கவும், நிர்வகிக்கவும் டெண்டர் அழைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.