| ADDED : அக் 16, 2025 05:09 PM
ஆமாதாபாத்:குஜராத்தில் நாளை (அக்டோபர் 17)அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் இன்று (அக்டோபர் 16) ராஜினாமா செய்தனர்.குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று டில்லியில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, குஜராத் பாஜ தலைவரும் மத்திய அமைச்சருமான சி.ஆர். பாட்டீல், புதிதாக நியமிக்கப்பட்ட மாநிலத் தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தீபாவளிக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நாளை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் பூபேந்திர படேல் தவிர, அனைத்து அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்தனர்.பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:முதல்வர் பூபேந்திர படேல் இன்று இரவு கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்தை சந்தித்து ராஜினாமா குறித்து முறையாக சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய குஜராத் அமைச்சரவை நாளை காலை 11.30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பதவியேற்கும்.குஜராத் பாஜ தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா இந்த செயல்முறையை ஒருங்கிணைத்து, தலைமையின் முடிவை அமைச்சர்களுக்கு தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக புதிய சக்தியை ஏற்படுத்த பாஜவின் விரிவான உத்தியின் ஒரு பகுதியாக இந்த மறுசீரமைப்பு பார்க்கப்படுகிறது.இவ்வாறு பாஜ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..