உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மனைவியிடம் பேசாமலேயே விவாகரத்து தருவதா? முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

 மனைவியிடம் பேசாமலேயே விவாகரத்து தருவதா? முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்த நவீன சமூகத்தில், மனைவியிடம் பேசாமலேயே கணவர் விவாகரத்து தரலாமா? இது எப்படி சாத்தியமாகும்?' என, முத்தலாக் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முஸ்லிம் பெண்களிடம் அவர்களது கணவர்கள், 'தலாக்' என அடுத்தடுத்து மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதமானது என அறிவித்த மத்திய அரசு, அதற்கு 2019ல் தடை விதித்தது. இதையடுத்து, இஸ்லாமியர் மொழியில் தலாக் - இ - பித்தத் என்ற தலாக் முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், அதன் மறுவடிவமான தலாக் - இ - ஹசன் என்ற முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், பெனாசிர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், முன்னாள் கணவர் குலாம் அக்தர் விவாகரத்துக்கான கையொப்பத்தை வழங்காததால், தன் மகளை பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தன் கணவரிடம் விவாகரத்து கையெழுத்து வாங்கி தரும்படியும் அவர் கோரியிருந்தார். தலாக் - இ - ஹசன் நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் சூரியகாந்த், உஜ்ஜல் பூயான், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெனாசிர் மனுவையும் விசாரித்தது. அப்போது, பெனாசிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கணவர் குலாம் அக்தர் வழங்கிய 11 பக்க தலாக் அறிவிப்பில், விவாகரத்து வழங்கியது தொடர்பான அவரின் அடையாளமோ, கையொப்பமோ இல்லை. அவர் தன் வழக்கறிஞர் வாயிலாகவே தலாக் அறிவித்துள்ளார்' என தெரிவித்தார். கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இது இஸ்லாத்தில் பொதுவான நடைமுறை' என வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: விவாகரத்து தொடர்பான பத்திரத்தில், கணவரின் அடையாளம் எதுவும் இல்லாதது ஒரு நடைமுறையாக இருக்க முடியுமா?- கணவருக்கு பதில், வழக்கறிஞர் விவாகரத்தை முன்மொழிவதா? இந்த புதுமையான யோசனைகள் எவ்வாறு கண்டு பிடிக்கப்படுகின்றன? விவாகரத்து செய்யப்படும் மனைவியிடம் கணவர் நேரடியாக தொடர்பு கொள்வதை தடுப்பது எது? விவாகரத்து தொடர்பாக கூட அவளிடம் பேச முடியாத அளவுக்கு கணவரிடம் அகந்தை உள்ளது. ஒரு நவீன சமூகத்தில் இதை எப்படி ஊக்குவிக்க முடியும்? இந்த வழக்கில், முஸ்லிம்களிடையே தற்போதுள்ள விவாகரத்து வகைகள் குறித்த தகவல்களை கணவர் தரப்பு வழக்கறிஞர் அளிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது, பெண்ணின் கணவர் நேரில் ஆஜராகி, எந்தவித நிபந்தனையும் இன்றி, மனைவி விரும்புவதை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ