கார் ஓட்டுனர் கொலை இருவருக்கு ஆயுள் சிறை
பெங்களூரு : கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெங்களூரின் அத்திப்பள்ளியில் வசிக்கும் ஹேமந்த் சாகர், 24, நெலமங்களாவின் ஜக்கசந்திராவில் வசிக்கும் வினோத்ராஜ், 26, நண்பர்கள். இவர்கள் காரை திருடி, அதன் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். இதற்காக 2019 மே 16ல், கெம்பேகவுடா, 30, என்பவரின் வாடகை காரை 'புக்' செய்தனர்.அவர்கள் கூறியபடி, பி.டி.எல்., கல்லுாரி முன் பகுதிக்கு வந்த கெம்பேகவுடா, இருவரையும் இன்னோவா கிரிஸ்டா காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். மாண்டியாவின் கரங்கதுார் அருகில் சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என, கூறி காரை நிறுத்தினர். ஓட்டுனர் கெம்பேகவுடாவும் கீழே இறங்கினார். அவரை பிடித்து வாயில் துணியை அடைத்தனர். கை, கால்களை கட்டி காரின் பின் இருக்கையில் தள்ளினர்.காரில் சுற்றித் திரிந்து, நெலமங்களாவின் மல்லர பானவாடிக்கு வந்தனர். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த, கார் உரிமை இடமாற்ற பத்திரத்தில், கெம்பேகவுடாவிடம் கையெழுத்து பெற்றனர். பின் அவரது கழுத்தை நெரித்து, கத்தியால் குத்திக் கொலை செய்தனர். நெலமங்களா, குனிகல் சாலையில் உள்ள பங்க் ஒன்றில் பெட்ரோல் வாங்கி, அவரது மீது ஊற்றி எரித்துவிட்டு, காருடன் தப்பினர்.எரிந்த நிலையில் ஆணின் சடலம் இருப்பது குறித்து, தகவலறிந்த நெலமங்களா போலீசார், அங்கு வந்து உடலை மீட்டு, விசாரணையை துவக்கினர். கொலையானவர் கெம்பேகவுடா, கார் ஓட்டுனர் என்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் வினோத்குமார், ஹேமந்த் சாகரை கைது செய்தனர். இவர்கள் காரை திருடும் நோக்கில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.விசாரணையை முடித்த போலீசார், பெங்களூரின் ஒன்பதாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாணையில் இருவரின் குற்றம் உறுதியானதால், இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.