உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் இளைஞர் உயிரிழப்பு கார் பறிமுதல்; டிரைவர் கைது

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு கார் பறிமுதல்; டிரைவர் கைது

புதுடில்லி:தென்மேற்கு டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, காரும் பறிமுதல் செய்யப்பட்டது.வசந்த் குஞ்ச் சிவமூர்த்தி பகுதிக்கு அருகே, 7ம் தேதி இரவு 10:00 மணிக்கு ஆஷிஷ் குமார், ​​27, என்பவர் பைக்கில் சென்றார். பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஷிஷ் குமார், குருகிராம் மேதாந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்து, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இந்த விபத்து குறித்து, வசந்த் குஞ்ச் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 20 வாகனங்கள் சந்தேகத்தின் பேரில் பட்டியலிடப்பட்டன. மேலும், இப்கோ சவுக்கில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியில், பைக் மீது மோதிய பழுப்பு நிற எஸ்.யு.வி., கார் அடையாளம் காணப்பட்டது.அந்தக் கார் மஜும்தார் என்ற பெண் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 133ன் கீழ், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. விபத்து நடந்த நேரத்தில் தனது டிரைவர் ஜினேந்தர் ஜெயின்,51, காரை ஓட்டிச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார், டில்லி ஜசோலா பகுதியில் இருந்த ஜினேந்தர் ஜெயினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை