| ADDED : பிப் 23, 2024 12:42 AM
நுாஹ்: ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., மம்மன் கான் மீது, போலீசார் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இங்குள்ள நுாஹ் மாவட்டத்தில் கடந்தாண்டு வி.எச்.பி., அமைப்பின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது, வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கலவரத்தை துாண்டியதாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ., மம்மன் கான், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் மீது நாகினா போலீஸ் ஸ்டேஷனில், யு.ஏ.பி.ஏ., எனப்படும் தேசிய சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., கான் வன்முறையைத் துாண்டுவதாகவும், சமூக ஊடக தளங்களில் ஆத்திரமூட்டும் பதிவுகளை பகிர்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் போலீசார் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், அவர் மீதான எப்.ஐ.ஆர்.,ல் சட்டவிரோத நடவடிக்கையில் அவர் ஈடுபடுவதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.