சிம்லா : ஹிமாச்சல பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்த சுயேட்சை எம்.எல்.ஏ., மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் தந்தை உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிர்ச்சி
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான ராஜ்யசபா தேர்தல் சமீபத்தில் நடந்தது. அப்போது, ஆளும் காங்கிரசுக்கு 40 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள பா.ஜ., வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். விசாரணையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் கட்சி மாறி ஓட்டளித்தது தெரிய வந்தது. சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்ததும் தெரியவந்தது. இது அந்த மாநில அரசியலில் குழப்பத்தையும், காங்., கட்சியினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காமல், கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக கூறி, ஆறு எம்.எல்.ஏ.,க்களும் சபாநாயகர் குல்தீப் சிங்கால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், அணி மாறி ஓட்டளித்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சஞ்சய் அவஸ்தி மற்றும் புவனேஷ்வர் கவுர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு
இதன் அடிப்படையில், ஹமிர்பூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., ஆஷிஷ் சர்மா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., - எம்.எல்.ஏ., சேதன்யா ஷர்மாவின் தந்தை உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.குற்ற சதி, ஊழல் நடைமுறைகள், தேர்தலில் தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சேதன்யா ஷர்மாவின் தந்தைக்கு இந்த விவகாரத்தில் உள்ள பங்கு குறித்து எதுவும் போலீஸ் தரப்பில் விளக்கப்படவில்லை.