பெங்களூரு: 'மூடா' முறைகேடு விவகாரம் தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒரு நாள் கடந்தும் லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க லோக் ஆயுக்தா போலீஸ் முடிவு செய்துள்ளது. எஸ்.பி., கடத்தல்?
'மூடா' முறைகேடு விவகாரம் தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நிலம் விற்ற தேவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி, லோக் ஆயுக்தா போலீசாருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, புகார்தாரர் ஸ்நேஹமயி கிருஷ்ணா, மைசூரு லோக் ஆயுக்தா போலீஸ் எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார். இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்த நீதிமன்றத்தின் உத்தரவின் நகலை வழங்க முற்பட்டார். அப்போது, எஸ்.பி., யுதேஷ் அலுவலகத்தில் இல்லை. அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, அவர் எடுக்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. வாட்ஸாப்பில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் எஸ்.பி., தரப்பில் பதில் வரவில்லை.இதனால், கோபமடைந்த ஸ்நேஹமயி கிருஷ்ணா, மதியம் 3:00 மணி வரை காத்திருந்தும் எஸ்.பி., வரவில்லை.எனவே தேவராஜ் போலீஸ் நிலையத்தில், 'எஸ்.பி., யுதேஷை காணவில்லை, அவரை முதல்வர் தரப்பினர் கடத்தி விட்டனர்' என்று புகார் அளிக்க சென்றார். இந்த புகாரை யாரும் பெற்று கொள்ளவில்லை.மேலும் கோபமடைந்த அவர், 'லோக் ஆயுக்தா போலீசார், முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. 'எனவே சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என்று கூறினார். ஐ.ஜி., ஆலோச னை
இதற்கிடையில், எஸ்.பி., யுதேஷ், பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்தில், ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது எந்த சட்டப்பிரிவின் கீழ் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.பின், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்ற எஸ்.பி., யுதேஷ், சில சந்தேகங்களை கேட்டறிந்தார். நீதிமன்ற உத்தரவையும் பெற்றார்.இதையடுத்து, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி, முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒரு நாள் கடந்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று புகார்தாரர் ஸ்நேஹமயி கிருஷ்ணா கோபம் அடைந்துள்ளார்.