உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகை வாங்கி ரூ.10 லட்சம் மோசடி முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு

நகை வாங்கி ரூ.10 லட்சம் மோசடி முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு

மூணாறு:தொடுபுழாவில் நகைக் கடையில் ரூ.10 லட்சத்திற்கு நகை வாங்கி மோசடி செய்த சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாத்யூஸ்டீபன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இடுக்கி மாவட்டத்தில் கேரளா காங்கிரஸ் (ஜே) பிரிவு சார்பில் இடுக்கி, உடும்பன்சோலைதொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மாத்யூஸ்டீபன். இவர் மற்றும் ஜனநாயக பாதுகாப்பு குழு அமைப்பின் தொண்டர்கள் ஜிஜி, சுபைர் ஆகியோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்திற்கு உதவுவதாக கூறி தொடுபுழா உள்ள நகைக் கடையில் கடந்த ஜன.17ல் ரூ.1.69 லட்சத்திற்கு நகை வாங்கினர். அத்தொகைக்கு இரண்டு காசோலை கொடுத்தனர். அவற்றை நகைக்கடை உரிமையாளர் வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லை என தெரியவந்தது. அதனால் பணத்தை கேட்டு உரிமையாளர் வற்புறுத்தியதால் , ரூ.1.69 லட்சத்தை கொடுத்தனர். அதன்பின் ஜன.27ல் அதே கடைக்குச் சென்ற ஜிஜி, சுபைர் ஆகியோர் ரூ.10 லட்சம் மதிப்பில் நகைகளை கடனுக்கு கேட்டனர். தர மறுத்த கடை மேலாளரை பாலியல் வழக்கில் சிக்க வைத்து விடுவதாக மிரட்டி நகைகளை வாங்கிச் சென்றனர். அத்தொகை கிடைக்காததால் கடை உரிமையாளர் முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட மூன்று பேர் மீது புகார் அளித்தார். தொடுபுழா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் வாங்கிய நகைக்கான பணம் கொடுக்கப்பட்ட நிலையில் அதன்பின் நடந்த மோசடி தனக்கு தெரியாது என மாத்யூஸ்டீபன் தெரிவித்தார். இதனிடையே போலி நகைகளை அடகு வைத்த சம்பவத்தில் ஜிஜி, சுபைர் ஆகியோர் கைதாகி தற்போது சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை