சுற்றுலா பயணிகளை மிரட்டிய ஜீப் டிரைவர் மீது வழக்கு ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் * ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்
மூணாறு: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாடகைக்கு டாக்ஸியை அழைத்ததற்காக மிரட்டல் விடுத்த ஜீப் டிரைவர், அப்பிரச்னையில் தலையிட்ட ஓட்டல் ஊழியரை தாக்கினார். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மூணாறில் அக்., 30ல் சுற்றுலா வந்த மும்பை சுற்றுலா பயணி ஜான்வி, டாக்கி டிரைவர்களால் மோசமான அனுபவத்தை சந்திக்க நேர்ந்தது. இச்சம்பவம் நாடு முழுதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சம்பவத்தில் மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் இரண்டு எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மூன்று டாக்ஸி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டாக்ஸியை அழைத்தது தொடர்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை மிரட்டிய ஜீப் டிரைவர், அப்பிரச்னையில் தலையிட்ட ஓட்டல் ஊழியரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு அருகே லட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் தேக்கடி செல்ல நேற்று முன்தினம் டாக்ஸியை அழைத்துள்ளனர். அதனை அறிந்த தங்கும் விடுதியின் அருகில் உள்ள லட்சுமி எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த ஜீப் டிரைவர் சரவணன் 43, தன் வாகனத்தை அழைக்காததால் மிரட்டல் தொனியில் சுற்றுலா பயணிகளிடம் நடந்துள்ளார். இதனை அறிந்த தங்கும் விடுதி ஓட்டல் ஊழியர் ஜோஸ்குரியன் தட்டி கேட்டார். அவரை ஜீப் டிரைவர் சரவணன் தாக்கினார். வெள்ளத்தூவல் போலீசில் ஜோஸ் குரியன் புகார் அளித்தார். சரவணன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.