மும்பையில் சி.பி.ஐ., சோதனை: இரு ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் கைது
மும்பை: ஊழல் வழக்கில் 2 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரை சிபிஐ கைது செய்தது.சந்தேகத்தின் பேரில் 7 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள சான்டாக்ரூஸ் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் பிராசசிங் மண்டலத்தில் ( எஸ்.இ.இ.பி.இசட்) நியமிக்கப்பட்ட இந்திய வருவாய் சேவையின் (ஐ.ஆர்.எஸ்) இரண்டு அதிகாரிகள் உட்பட ஏழு பேரை லஞ்ச மோசடி தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறியதாவது:ஊழல் வழக்கு தொடர்பாக, நேற்று தொடங்கிய சோதனை நடவடிக்கையில், ஐஆர்எஸ் அதிகாரிகள், இணை மேம்பாட்டு ஆணையர் சிபிஎஸ் சவுகான் மற்றும் துணை வளர்ச்சி ஆணையர் பிரசாத் வர்வந்த்கர் மேலும் இரண்டு உதவி மேம்பாட்டு ஆணையர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளோம். சவுகானிடம் இருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம்.கைது செய்யப்பட்ட உதவி வளர்ச்சி ஆணையர் ரேகா நாயரின் வளாகத்தில் இருந்த 40 லட்சம் ரூபாயுடன் மொத்தம் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் விசாரணையை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.