கார் மீது சிமென்ட் மிக்ஸர் லாரி கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்
பெலகாவி: பெலகாவி மாவட்டம், பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த சிமென்ட் மிக்ஸர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் நின்றிருந்த கார் மீது கவிழ்ந்தது.இதை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், கிரேன் இயந்திரத்தை வரவழைத்தனர்.பின், காரில் இருந்து இருவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் கிரைம் பிரிவு டி.சி.பி., நிரஞ்சன்ராஜ் கூறியதாவது:தார்வாடை சேர்ந்த பரப்பா பலிகை, நிங்கப்பா கொப்படா ஆகியோர், பெலகாவியில் உள்ள கார் ஷோரூமுக்கு செல்ல வந்திருந்தனர். தங்களின் உறவினரையும் அழைத்துச் செல்ல, சாலை ஓரத்தில் காத்திருந்தனர்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த சிமென்ட் மிக்ஸர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'சிமென்ட் மிக்ஸர் லாரியின் டயர்கள் மிகவும் பழமையானது. அத்துடன் சிமென்டும் இருந்ததால் கட்டுப்பாட்டை இழுந்து விபத்துக்குள்ளானது' என கிரேன் குழுவினர் தெரிவித்தனர்.கடந்தாண்டு பெங்களூரு நெலமங்களாவில் கார் மீது கன்டெய்னர் விழுந்ததில், தொழிலதிபர் தன் குடும்பத்துடன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.