மலம்புழா பூங்கா நவீன மயமாக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
பாலக்காடு; மலம்புழா தோட்டம் மற்றும் பூங்கா நவீன மயமாக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பாலக்காட்டில், கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:ரூ.75.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மலம்புழா தோட்டம் மற்றும் பூங்கா நவீன மயமாக்குவது குறித்து, கேரள அரசு சமர்ப்பித்த திட்டத்துக்கு, 'சுவதேச் தர்சன் 2.0' என்ற திட்டத்தில் உட்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதனுடன், 'ஆலப்புழா - ஒரு உலகளாவிய நீர் அதிசயம்' என்ற, 93.17 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மலம்புழா திட்டத்தில், தீம் பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், கலாசார மையங்கள், நிலத்தோட்டம் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை அமைப்புகள் ஆகியவை அடங்கும். வரும், 2026 மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் இந்த இரு திட்டங்களையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆலப்புழாவின் நீர்நிலைகளை இணைத்தால், 'ஆலப்புழா - ஒரு உலகளாவிய நீர் அதிசயம்' என்ற திட்டம் ஆலப்புழாவை ஒரு புதிய சுற்றுலா தலமாக மாற்றும். இப்பகுதியை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.ஆலப்புழாவின் சுற்றுலா திறனை அதிகரிக்க இந்தப் புதிய திட்டம் உதவும். இத்திட்டத்தில், கடற்கரை மேம்பாடு, கால்வாய் பகுதி மேம்பாடு, சர்வதேச கப்பல் முனையம், கலாசார மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான வசதிகள் போன்றவை அடங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.