புதுடில்லி: பயங்கரவாத நடவடிக்கைகள் வாயிலாக இந்தியா உட்பட உலக அளவில் இஸ்லாமிய அரசை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டதாக, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது.உலகம் முழுதும் இஸ்லாமிய அரசை நிறுவி, இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்வது என்ற குறிக்கோளுடன் ஜெருசலேமில் துவங்கப்பட்ட இயக்கம் ஹிஸ்ப் உத் தஹ்ரீர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டுக்கு எதிரான கொள்கைகளுடன் வெறுப்பையும், பிரிவினையையும் பரப்புவதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. விசாரணை
இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் என்.ஐ.ஏ.,வால், கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைக்கு ஆதரவாக இந்த அமைப்பைச் சேர்ந்தோர் பாகிஸ்தானிடம் உதவி கேட்டது ஊர்ஜிதமானது.மேலும், அவர்களது நோக்கம் பயங்கரவாத செயல்கள் வாயிலாக இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவது என்பதையும் என்.ஐ.ஏ., கண்டறிந்தது. இந்த அமைப்பின் பிரதான நோக்கம் அறிந்த ஜெர்மனி, பிரிட்டன், எகிப்து மற்றும் பல ஆசிய, அரபு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், அவ்வமைப்பை தடை செய்து விட்டன.இந்நிலையில், இந்தியாவிலும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்ட மத்திய அரசு, அவ்வமைப்பை தடை செய்வதாக அறிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டவும், இந்தியா முழுதும் இருக்கும் அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்துள்ளது. 'தவா' கூட்டம்
சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு செயலிகளை பயன்படுத்தி 'தவா' கூட்டம் என்ற பெயரில் இளைஞர்களை திரட்டி, அவர்களை பயங்கரவாத செயல்கள் செய்ய ஊக்குவித்துள்ளது. ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பினர், நாட்டில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுஉள்ளனர். இதனால், அவ்வமைப்பு தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இறையாண்மைக்கு அச்சுறுத்தல்!
பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி நாட்டை பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது. ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்கியது. அதனால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்