உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே விதமான ரியல் எஸ்டேட் விதிமுறைகள்: நாடு முழுதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு

ஒரே விதமான ரியல் எஸ்டேட் விதிமுறைகள்: நாடு முழுதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வீடு, மனை விற்பனையில் உருவாகும் பிரச்னைகளை தீர்க்க, 2016ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதை அமல்படுத்த, மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் மாநில அரசுகள், சட்டசபைகளில் அதற்கான மசோதாவை நிறைவேற்றி யதுடன், தனித்தனியாக விதிகளையும் வகுத்தன. இதன் பின், ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும், மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் ஏற்படுத்தப்பட்டன. நடவடிக்கை தற்போது, நாடு முழுதும் ஒரே மாதிரியான ரியல் எஸ்டேட் சட்டம் அமலில் இருந்தாலும், அவற்றின் ஒழுங்கு முறை விதிகளில், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு கட்டுமான நிறுவனம், வீட்டை ஒப்படைக்க தாமதம் செய்யும் நிலையில், இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிடுகிறது. அந்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், இழப்பீட்டை வசூலிப்பதில் ஹரியானா மாநிலத்தில் கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. எனவே, ரியல் எஸ்டேட் துறையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, நாடு முழுதும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறை விதிகளை பின்பற்ற வேண்டிய தேவை எழுந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து, சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சிலின் தேசிய மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் மாநாட்டில், ரியல் எஸ்டேட் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ராஜஸ்தான் உட்பட, பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள், தமிழக ரியல் எஸ்டேட் ஆணையத்தின் விதிகளை பின்பற்றுவதாக தெரிவித்தன. மேலும், நாடு முழுமைக்கும் ஒரே ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் இருக்கும் நிலையில், விதிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். வலியுறுத்தல் ரியல் எஸ்டேட் ஆணையங்களில் பதிவாகும் திட்டங்கள் குறித்த விபரங்களை அனைவரும் அறியும் வகையில், ஒருங்கிணைந்த இணையதளம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 'இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, அதில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் உறுதி அளித்தார். எனவே, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் திட்டங்கள் பதிவிலும், விதிமுறைகளிலும், நாடு முழுதும் ஒரே நடைமுறை அமலுக்கு வர வாய்ப்பு உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !