சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாடு விரிவான திட்ட அறிக்கை தயார்
மைசூரு: மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ், சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டுக்காக, முழுமையான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் பிரசாத் எனும் புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மிகம், பாரம்பரிய மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ், நாடு முழுதும் முக்கிய ஆன்மிக தலங்கள் சீரமைக்கப்படுகின்றன. அதுபோன்று, கர்நாடக மாநிலம், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலும் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையை, மாநில சுற்றுலா துறை தயார் செய்து வந்தது.இது தொடர்பாக, துறை இணை இயக்குநர் சவிதா கூறியதாவது: ரூ.45.71 கோடி
பிரசாத் திட்டத்தின் கீழ், 45.71 கோடி ரூபாய்க்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை, மத்திய சுற்றுலா துறைக்கும், மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நிதி வெளியிட்ட பின், டெண்டர் பணிகள் துவங்கும்.சாமுண்டி மலைக்கு வரும் சுற்றுலா பயணியர், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோள். இதை செயல்படுத்த, மலையில் ஆறு இடங்கள் அடையாளம் காணப்பட்ட உள்ளன.கோவில் முற்றம் புதுப்பித்தல், சாமுண்டீஸ்வரி கோவில் வளாகத்துக்குள் மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள் உட்பட பல திட்டங்கள் உள்ளடக்கி உள்ளது.மகிசாசூரன் சிலையை சுற்றி, அலங்கார நீரூற்று, மின் விளக்குகள் அமைக்கப்படும். புதிய போலீஸ் பூத், தகவல் மையம், கட்டுப்பாட்டு அறை, கூடுதல் இருக்கை ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் ஆகியவை அடங்கும். நுழைவு வாயில், பெயர் பலகையும் நிறுவப்படும். நந்தி சிலை
திருவிழா நாட்களில் தெப்ப உற்சவம் நடக்கும் தேவிகெரேயில், கல் பந்தல், நுழைவு வாயில் கட்டுதல், தோட்டம் அமைத்தல், படிக்கட்டுகள் சீரமைத்தல், புதிய கழிப்பறை வசதிகள் செய்யப்படும். அதுபோன்று நந்தி சிலை அருகில், நந்தியை தரிசிக்க வரிசை செல்லும் பகுதி, குடிநீர் பகுதி, அமரும் பகுதிகள் அமைக்கப்படும்.படிக்கட்டுகள் வழியாக மலை ஏறும் பக்தர்களுக்காக, படிக்கட்டுகளின் இருபுறமும் தண்டவாளங்கள், மழையில் இருந்து பாதுகாக்க தங்கும் இடங்கள், குடிநீர் வசதிகள், இளைப்பாறுவதற்கான இருக்கைகள் ஆகியவை அடங்கும்.பாதையில் தகவல் பலகைகள் நிறுவப்படும். கூடுதலாக, பொதுவான மலை மேம்பாட்டில், கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கான்கிரீட் சாலை அமைத்தல்; குடிநீர் குழாய்கள் நிறுவுதல், கோவிலை சுற்றி அழகுபடுத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.