உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமி மீதான சுரங்க குத்தகை முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை? பழிவாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்த காங்., அரசு

குமாரசாமி மீதான சுரங்க குத்தகை முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை? பழிவாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்த காங்., அரசு

பெங்களூரு : மத்திய அமைச்சர் குமாரசாமி மீதான சுரங்க குத்தகை முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் உத்தரவிட்டு இருப்பதால், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை, காங்கிரஸ் அரசு கையில் எடுத்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கிய விவகாரத்தில், சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.முதல்வர் பதவி விலக கோரி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பாதயாத்திரை நடத்தின. இதில், மத்திய அமைச்சர் குமாரசாமியும் கலந்து கொண்டார்.முதல்வர் மீது விசாரணைக்கு உத்தரவிட கோரி, சமூக ஆர்வலர்கள் ஆபிரகாம், சிநேகமயி கிருஷ்ணா ஆகியோர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.

போராட்டம்

முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி அளித்து கவர்னர் உத்தரவிட்டார். கவர்னர் உத்தரவுக்கு எதிராக, முதல்வர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது ஆக., 29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான பழைய வழக்குகளை தோண்டி எடுத்து, பழிவாங்கும் நடவடிக்கையில் காங்., அரசு இறங்கியுள்ளது.

550 ஏக்கர் ஒதுக்கீடு

கடந்த 2007ல் குமாரசாமி முதல்வராக இருந்தபோது, பல்லாரி சண்டூரில் உள்ள சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் என்ற நிறுவனத்திற்கு, விதிகளை மீறி 550 ஏக்கரில் சுரங்க குத்தகை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அப்போது லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே விசாரணை நடத்தினார்.இதில், குமாரசாமி சட்டவிரோதமாக கனிம சுரங்க குத்தகை கொடுத்தது தெரிந்தது. அதன்பின், காங்., - ம.ஜ.த., மற்றும் பா.ஜ., ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், இந்த வழக்கை யாரும் கண்டுகொள்ளவில்லை.கடந்த ஆண்டு மே மாதம் காங்., ஆட்சிக்கு வந்த நிலையில், சுரங்க ஒதுக்கீடு வழக்கில் குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு கோரிக்கை வைத்தது. குமாரசாமி முன்னாள் முதல்வர் என்பதால், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கவர்னரின் அனுமதி வாங்க வேண்டும்.ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு, சில ஆதாரங்களை கவர்னர் கேட்டு இருந்தார். அந்த ஆதாரங்களை தற்போது சிறப்பு புலனாய்வு குழு, அவசரம் அவசரமாக கவர்னரிடம் சமர்ப்பித்து, குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் சதி

'மூடா' விவகாரத்தில் தன் மீது புகார் கொடுத்த உடனே, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளதால், குமாரசாமி வழக்கிலும் அதுபோன்ற நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியை காங்., அரசு ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, 'இனிமேல் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரையும் பாவம் பார்க்க மாட்டேன். பழிவாங்கும் அரசியலை செய்வேன்' என்று, ஆவேசமாக கூறியிருந்தார்.தற்போது, குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கவர்னரிடம் அனுமதி கேட்டு இருப்பதன் மூலம், கர்நாடக காங்., அரசு பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்து உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 21, 2024 05:47

கண்டிப்பாக யாராக இருந்தாலும் குற்றம் செய்து இருந்தால் கட்சி பாகுபாடு இல்லாமல் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சிந்துவுக்கு மட்டும் 14 மனைகளை என்பது ரொம்பவே ஓவர். அதை நிதி மன்றமே முன்வந்து மறைப்பதுதான் எங்கப்பன் குறித்துக்குள் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ