உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்கா கணவருக்கு சிக்கல் நில பேர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரியங்கா கணவருக்கு சிக்கல் நில பேர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வாத்ராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹரியானாவின் குருகிராமில், மனேசர் ஷிகோபூரில் உள்ள 3.5 ஏக்கர் நிலம், 2008 பிப்ரவரியில் விற்கப்பட்டது. ராபர்ட் வாத்ரா இயக்குநராக இருந்த, 'ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம், அந்த நிலத்தை, 'ஓம்காரேஷ்வர் பிராபர்டீஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து, 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.அப்போது ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹுடா தலைமையில் காங்., ஆட்சி நடந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், அந்த நிலத்தை ராபர்ட் வாத்ரா நிறுவனம் டி.எல்.எப்., நிறுவனத்திற்கு, 58 கோடி ரூபாய்க்கு 2012 செப்டம்பரில் விற்றது.தொடர்ந்து, 2012 அக்., மாதத்தில் ஹரியானாவின் நில ஒருங்கிணைப்பு மற்றும் நில ஆவண பதிவு ஐ.ஜி.,யாக அசோக் கெம்கா ஐ.ஏ.எஸ்., பதவியேற்றதும், இந்த நில பேரத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் மாதம் மூன்று முறை விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், ராபர்ட் வாத்ரா மற்றும் இதில் சம்பந்தப்பட்ட சிலருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ராபர்ட் வாத்ராவுக்கு சொந்தமான 36 கோடி ரூபாய் மதிப்புள்ள 43 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரிட்டன் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடனான தொடர்பு, ராஜஸ்தானின் பிகானீரில் நடந்த நில பேரம் என மேலும் இரு வழக்குகள் தொடர்பாகவும், வாத்ராவிடம் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை