நீட் மாணவர்களிடம் மோசடி; சென்னையில் படித்தவர்கள் கைது
நொய்டா : 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களை குறிவைத்து, பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் அடங்கிய கும்பலை, உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். இவர்களில் இருவர், ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு பல்கலையில் படித்தவர்கள் என தெரியவந்தது. மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்தது.5 லட்சம் ரூபாய்முன்னதாக, உத்தர பிரதேசத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர், உறவினர்களின் விபரங்களை மறைமுகமாக பெற்று, அவர்களின் பிள்ளைகளை நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெறச் செய்வதாகவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் அளிக்கும்படியும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் பலர் புகார் அளித்தனர்.இதன்படி, வழக்குப் பதிவு செய்து நொய்டா சிறப்பு அதிரடி படையினர் விசாரணை நடத்தினர். இதில், டில்லியைச் சேர்ந்த விக்ரம் குமார் சாஹு, 30, தரம்பால் சிங், அனிகெட் ஆகிய மூவரும் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 மொபைல் போன்கள், தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கையேடு, வாக்காளர் அடையாள அட்டைகள், கார் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.தலைமறைவுஇதுகுறித்து சிறப்பு அதிரடிப்படையின் கூடுதல் எஸ்.பி., ராஜ் குமார் மிஸ்ரா கூறியதாவது:கைதான விக்ரம் குமார் சாஹு, 2011ல் தமிழகத்தின் சென்னையில் உள்ள பல்கலையில் பயோ டெக்னாலஜி பிரிவில் படித்தார். அங்கு, அனிகெட்டுடன் இணைந்து, 30 சதவீத கமிஷன் பெற்று, பல்கலைக்கு மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதே பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தபின், அவர் டில்லி சென்றார்.அங்கு தரம்பால் சிங்குடன் பழக்கம் ஏற்பட்டு, 'அட்மிஷன் வியூ' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கினார். இதன் வாயிலாக, மருத்துவ மாணவர்களின் விபரங்களை சேகரித்து, கல்லுாரிகளில் எளிதில் இடம் கிடைக்க செய்வதாக கூறி, அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை பெற்ற இந்த கும்பல், பின் தலைமறைவானது. இதுதொடர்பாக 2023ல் பல புகார்கள் எழுந்தன. சிறிது காலத்திற்கு பின் மீண்டும் அக்கும்பல் அதே மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.