உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிநீர் தாமத கட்டணம் தள்ளுபடி முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

குடிநீர் தாமத கட்டணம் தள்ளுபடி முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

புதுடில்லி:“வீட்டு உபயோகத்துக்கான குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி 31க்குள் செலுத்துவோருக்கு தாமதக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். பிப். 1 முதல் மார்ச் 31க்குள் செலுத்துவோருக்கு தாமதக் கட்டணத்தில் 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார். டில்லி முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் று கூறியதாவது: டில்லியில் 29 லட்சம் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத இணைப்புகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை தற்போது 1,000 ரூபாயாக குறைத்துள்ளோம். எனவே, வீடுகளில் சட்டவிரோத குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அபராதத் தொகையை செலுத்தி தங்கள் இணைப்பை சட்ட ரீதியாக மாற்றிக் கொள்ளலாம். இதுவே, வணிகப் பயன்பாட்டுக்கான இணைப்புக்கு 61,000 ரூபாயாக இருந்த அபராதத் தொகை 5,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வீடு மற்றும் வணிகம் உட்பட குடிநீர் கட்டண நிலுவைத் தொகை 87,589 கோடி ரூபாயாக இருக்கிறது. அதை வசூலிக்க டில்லி ஜல் போர்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், அசல் தொகை 7,125 கோடி ரூபாய் எனவும், அபராதத் தொகை 80,463 கோடி ரூபாய் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குக்ள் செலுத்துவோருக்கு தாமதக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். பிப். 1 முதல் மார்ச் 31 வரை செலுத்துவோருக்கு தாமதக் கட்டணத்தில் 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். சத் பூஜை சத் பூஜைக்கான யமுனை நதி மற்றும் படித்துறை பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. சத் பூஜையின் போது யமுனை நதி நீரில் ஒரு நச்சு நுரை இருக்காது. யமுனை நதியில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நச்சு நுரை ஏற்படுகிறது. கடந்த ஆண்டுகளில் நச்சு நுரை நிறைந்த நீரில் மக்கள் முகம் சுழித்தபடி சத் பூஜை சடங்குகளை செய்தனர். ஆனால், இந்த ஆண்டு, மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பா.ஜ., அரசு செய்து தரும். சத் பூஜைக்காக டில்லி மாநகர் முழுதும் 1,000 இடங்களி சிறப்புக் கூடாரங்கள் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை டில்லி ஜல் போர்டு அதிகாரிகள் மற்று நீர்வளத்துறை அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதுடன், புதிய நிலையங்கள் கட்டவும் முடிவு செய்துள்ளோம். மாநகர் முழுதும் தூர்வாரப்படாத கழிவுநீர் வடிகால்வாய்களை, 'ட்ரோன்' வாயிலாக கண்டறிந்து சுத்தம் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. யமுனை நதி விரைவில் மீட்டெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ரூ.10 கோடி கடன் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், 'பஹ்லே இந்தியா அறக்கட்டளை நேற்று நடத்திய, 'இந்தியாவில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையில் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துதல்' என்ற கருத்தரங்கம் நடந்தது. அதில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: நம் நாட்டில் முந்தைய அரசுகள் மக்கள்தொகையை ஒரு பொறுப்பாகக் கருதின. ஆனால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அதை ஒரு சொத்தாக மாற்ற முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார். மக்கள்தொகையில் பாதி இருக்கும் பெண்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தால் நாடு எப்படி வளர்ச்சியடையும்? என்பது பிரதமரின் சிந்தனை. சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். பெண்களுக்கு அதிகாரமளித்து வரும் பா.ஜ., ஆட்சி நாட்டின் பொற்காலமாக திகழ்கிறது. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் டில்லி அரசும் முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் தொழில் முனைவோருக்கு எந்த ஜாமினும் இல்லாமல் 10 கோடி ரூபாய் வரை டில்லி அரசு கடன் வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை