விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படும் முதல்வர் ரேகா குப்தா உறுதி
புதுடில்லி:பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, விவசாயிகளுடன் முதல்வர் ரேகா குப்தா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, விவசாயிகள் கூறிய பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.டில்லி சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ., 21 ஆண்டுகளுக்குப் பின், டில்லியில் ஆட்சி அமைத்தது.முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், வரும் 25ம் டில்லி அரசின் 2025 - 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து முதல்வர் ரேகா ஆலோசனை நடத்தி வருகிறார். மகளிர் அமைப்புகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், விவசாயிகளுடன் நேற்று, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.மழைக் காலத்தில் வடிகால் நிரம்பி வழிந்து, கிராமங்களில் பயிர்சேதம் ஏற்படுவதை தடுத்தல், உரம் மற்றும் விதைக்கு மானியம், விளைந்த பயிர்களை காப்பாற்றுதல் 10 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகளின் டீசல் டிராக்டர்களை பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்துதல், 20 ஆண்டுகள் வரை விவசாயத்துக்கு டிராக்டர்களை பயன்படுத்த அனுமதித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முதல்வரிடம் சமர்ப்பித்தனர். மேலும், முந்தைய அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து, முதல்வர் ரேகா பேசியதாவது:மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்தும் இரட்டை எஞ்சின் கொண்ட பா.ஜ., அரசு, விவசாயிகளின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும். அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் வளர்ச்சியை உறுதி செய்ய, மத்திய அரசு உதவியுடன் டில்லி அரசு அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.
மூத்த சகோதரிக்கே பொறுப்பு
முன்னாள் முதல்வர் மறைந்த சாஹிப் சிங் வர்மா 82வது பிறந்த நாளான நேற்று, முண்ட்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ரேகா குப்தா, சாஹிப் சிங் மகனும் அமைச்சருமான பர்வேஷ் வர்மா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அப்போது ரேகா குப்தா பேசியதாவது:நம் நாட்டில் மூத்த சகோதரிக்குத்தான் பெரும்பாலும் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. சகோதரியான நான் முதல்வராக பதவி வகிக்கும் அதே நேரத்தில் சகோதரர் பர்வேஷ் வர்மா அமைச்சராக பணியாற்றுகிறார்.டில்லியின் வளர்ச்சிக்கு சாஹிப் சிங் வர்மாவின் பணிகள் மறக்க முடியாதது. அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதே எங்கள் முக்கியப் பணி.சகோதரியும் சகோதரனும் இணைந்து சாஹிப் சிங் வர்மா விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவோம். டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் பதவியை நான் வகித்தபோது, அப்போது முதல்வராக இருந்த சாஹிப் சிங், என்னை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.இவ்வாறு அவர் பேசினார். கடந்த 1996ம் ஆண்டு பிப்., 27 முதல் 1998ம் ஆண்டு அக்., 12 வரை டில்லி முதல்வராக சாஹிப் சிங் வர்மா பதவி வகித்தார்.டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதுடில்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா முதல்வர் ஆக்கப்படலாம் என கூறப்பட்டது.