உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக விவசாயிகளை விடுவிக்க முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடக விவசாயிகளை விடுவிக்க முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு: ''போராட்டம் நடத்த சென்ற கர்நாடக விவசாயிகளை கைது செய்த, மத்திய பிரதேச அரசின் செயல் கண்டித்தக்கது. கைது செய்துள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.விளைச்சலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது, பயிர் காப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுடில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், கிஷான் மோர்ச்சா விவசாய கூட்டமைப்பு, இன்று மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது.இதில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதிலும் இருந்து, 200க்கும் அதிகமான விவசாய சங்கத்தினர் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டனர்.கர்நாடகாவின் ஹூப்பள்ளி, பெலகாவி, பல்லாரி உட்பட வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 70 விவசாயிகள், ரயிலில் புதுடில்லிக்கு இரண்டு நாட்களுக்கு முன் புறப்பட்டனர். இவர்களுக்கு மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.இதை அறிந்த மத்திய பிரதேச அரசு, போபால் ரயில் நிலையத்தில், கர்நாடக விவசாயிகளை நேற்று கைது செய்தது. அவர்கள், அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்ட அறிக்கை:போராட்டம் நடத்த சென்ற கர்நாடக விவசாயிகளை கைது செய்த, மத்திய பிரதேச அரசின் செயல் கண்டித்தக்கது. கைது செய்துள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.புதுடில்லி போராட்டத்தில் பங்கேற்க அனுப்ப வேண்டும். இதன் பின்னணியில், மத்திய பா.ஜ., அரசு உள்ளது. கைது செய்வதன் மூலம், விவசாயிகளை அடக்க முடியாது.இத்தகைய செயல்களால் விவசாயிகள் மேலும் போராட்டம் நடத்துவர். மண்ணின் மைந்தர்கள் போராட்டம் ஓயாது. சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கர்நாடக விவசாயிகள் கைதை கண்டித்து, கர்நாடக மாநில விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாய சங்கத்தினர், நேற்று மைசூரு - நஞ்சன்கூடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை