விரைவில் வெளியாகிறது சிப் பதிக்கப்பட்ட இ-பாஸ்போர்ட்
புதுடில்லி: புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தனி பயனாளர் குறித்த விபரங்கள் அடங்கிய, 'சிப்' பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. குடிமக்களுக்கு மின்னணு பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை பல கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'பாஸ்போர்ட் சேவை - 2.0' எனும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் துவங்கியது. இதன் மாதிரி திட்டம் சென்னை உட்பட, 12 நகரங்களில் முதலில் அமலுக்கு வந்தது.
சிறப்பம்சங்கள் :
முன் பகுதியில் ரேடியோ அலை அடையாள சிப், பயணியரின் கைரேகை, முகம் உள்ளிட்ட, 'பயோமெட்ரிக்' தகவல்களை ரகசிய குறியீட்டுடன் சேமித்து வைத்திருக்கும் இமிகேரஷன் கவுன்டர்களில் இதை டெபிட், கிரெடிட் கார்டுகளை போல ஸ்கேன் செய்தால் போதும், ஆவணச் சரிபார்ப்பு மிக வேகமாக முடியும். வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும்.சிப்பில் டிஜிட்டல் கையொப்பத்துடன் தகவல்கள் இருக்கும். அதை திருத்தவோ, போலி பாஸ்போர்ட்களை உருவாக்கவோ முடியாது.இந்த மின்னணு பாஸ்போர்ட்கள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு ஒத்துப் போகின்றன. எனவே சர்வதேச விமான நிலையங்களிலும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.