உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் மேகவெடிப்பு! ஜம்முவை புரட்டி போட்டது பெருவெள்ளம்; 10 பேர் உயிரிழப்பு; வீடுகள், பாலங்கள் சேதம்

மீண்டும் மேகவெடிப்பு! ஜம்முவை புரட்டி போட்டது பெருவெள்ளம்; 10 பேர் உயிரிழப்பு; வீடுகள், பாலங்கள் சேதம்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்ட மேகவெடிப்பால் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள், பாலங்கள் சேதமடைந்தன. தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த பெருமழையில் 10 பேர் உயிரிழந்தனர். ஒரு சில தினங்களில், கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, 65 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் மாயாகினர். இந்த பேரழிவில் இருந்து மீள்வதற்குள், ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், மேக வெடிப்பு காரணமாக நேற்று பெருமழை கொட்டி தீர்த்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அருகே மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால், வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் தோடா மாவட்டத்தில் வீடுகள் சேதமடைந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முக்கிய நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேகவெடிப்பு, நிலச்சரிவு, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக தோடா மற்றும் கிஷ்த்வாரை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் பெரும் பகுதி கனமழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதே போல் ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வாருடன், காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் சின்தன் சாலையும் மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கத்ராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத், ஸ்ரீ சக்தி மற்றும் ஹேம்குந்த் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் வழியில் இந்திரபிரஸ்தா அன்னதான நிலையம் அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பக்தர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போர்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கனமழையால் தற்போது நிலைமை மோசமாக இருப்பதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விளக்கினார். கனமழையால் ஜம்மு விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், தற்போதைக்கு அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அமித் ஷாவிடம் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்களுக்கு உதவ அவசர எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை நீடிப்பதால் ஜம்முவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாஸி, உதம்பூர், ரஜோரி, ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் மேகவெடிப்பு, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மணாலியில் நிலச்சரிவு; வீடுகள் சேதம் ஹிமாச்சலின் மணாலியில் பெய்த கனமழையால் பீஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்துள்ளது. கரைபுரண்ட வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள், கடைகள், பல அடுக்குகள் கொண்ட ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டன. முக்கிய நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலை தொடர்பு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி