உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் அமைப்பு சட்ட முகவுரையை படியுங்கள்; மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

அரசியல் அமைப்பு சட்ட முகவுரையை படியுங்கள்; மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

பெங்களூரு : ''அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்,'' என்று, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.கர்நாடக சமூக நலத்துறை சார்பில், பெங்களூரு அம்பேத்கர் பவனில், நேற்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:உலகிலேயே மிக நீண்ட அரசியலமைப்பு சட்டம் நம்முடையது. இந்த சட்டம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், கெட்டவர்களின் கைகளுக்கு சென்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். அரசியலமைப்பின் மதிப்பை பின்பற்றுவோர் கைகளில் இருந்தால் மட்டுமே, அந்த அமைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.பொருளாதார சமத்துவமின்மையும், சமூக சமத்துவமின்மையும் உள்ள சமூகத்திற்குள் நாம் நுழைகிறோம். எனவே அரசியல் சுதந்திரத்துடன் பொருளாதார சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை புரிந்து கொள்வது, சட்டத்திற்கு கீழ்படிந்து நடப்பதுவே சமூகநீதி. நமது நாட்டில் அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் உள்ளனர். அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

பாகுபாடு

அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன், இந்தியாவில் எழுதப்படாத ஒரு சட்டம் இருந்தது. அது மனிதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியது. அந்த சட்டம் சமத்துவமின்மையை ஆதரித்தது. தலித்துகள், பெண்களுக்கு கல்வி கிடைக்க எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அனைத்தையும் அரசியலமைப்பு சட்டம் மாற்றியது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.உலகின் அனைத்து அரசியல் சாசனங்களையும் ஆய்வு செய்த பின், நமது அரசியல் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார். அரசியலமைப்பு நோக்கங்களை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் சாசனப்படி நடக்க வேண்டும்.பசவண்ணர் 850 ஆண்டுகளுக்கு முன், ஜாதி அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால் இன்னும் ஜாதி, மதம் பாகுபாடு நீங்கவில்லை. குழந்தைகளை மதச்சார்பற்றவர்களாக வளர்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு நாம் செலுத்தும் உயரிய மரியாதை.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ், தலைமை செயலர் ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருத்தங்கள்

பின், கர்நாடக இளைஞர் நலத்துறை சார்பில், பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொண்டார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு மலர் துாவி மரியாதை செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி: அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பயன்படுத்துவதுடன் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றுவது அவசியம். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதும், அதன் விருப்பங்களை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதும் எங்கள் எண்ணம். நமது அரசியலமைப்பு சட்டத்தில், ஏற்கனவே 106 திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. அரசியல் சாசனத்தின் மூலம் தான் நான் முதல்வரானேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Amruta Putran
நவ 27, 2024 07:46

If all students learn Secularism, will Congress close all Madharsas


Sathyanarayanan Sathyasekaren
நவ 27, 2024 07:00

சித்தராமையா சரியாக சொல்லி இருக்கிறார், மாணவர்கள் ஒரிஜினல் அரசியல் சட்ட முகப்புரையை படிக்கவேண்டும், இந்திரா கான் போலி காந்தியால் திருத்தப்பட்ட, மதசார்பற்ற என்ற வார்த்தையை இடைச்சொருகள் செய்த, அந்நியநாட்டு மாதங்களுக்கு ஆதரவாக, நேரு கான் போலி காந்தி குடும்பத்தால் திருத்தங்கள் செய்யப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள வித்தியாசங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை