துமகூரில் கிரிக்கெட் மைதானம் முதல்வர் சித்தராமையா அடிக்கல்
துமகூரு: துமகூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான பணியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.கர்நாடகாவில் ஏற்கனவே சின்னசாமி கிரிக்கெட் மைதானம் உள்ளது. உலகளவில் பெங்களூரின் பெயர் புகழ் பெற்றிருப்பதால், கூடுதலாக கிரிக்கெட் மைதானம் கட்ட, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், அரசிடம் கோரியிருந்தது.இதை ஏற்றுக் கொண்ட அரசு, துமகூரு மாவட்டம், சோரேகுண்டே அருகில் உள்ள பி.கொல்லஹள்ளியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்ட அனுமதி அளித்தது.இதையடுத்து, முதல்வர் சித்தராமையா நேற்று துமகூருக்கு வந்தார். மைதானம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி துவக்கிவைத்து, தொப்பி அணிந்து, 'பேட்டிங்' செய்தார். ம.ஜ.த. - எம்.எல்.ஏ., சுரேஷ் பாபு பந்து வீசினார். முதல்வரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர் ராஜண்ணா, எம்.எல்.ஏ., சுரேஷ் 'பேட்டிங்' செய்தனர்.பின், 41 ஏக்கரில் அமையும் கிரிக்கெட் மைதானம் அமையும் இடத்துக்கான நிலப்பத்திரத்தை, கிரிக்கெட் சங்கச் செயலர் சங்கரிடம் முதல்வர் வழங்கினார்.அப்போது முதல்வர் சித்தராமையா பேசியதாவது:விரைவில் மைசூரிலும் கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கப்படும். இன்று (நேற்று) துமகூரில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மைதானம் கட்டும் பணி துவங்கியது. இப்பகுதியில் கிரிக்கெட் வளர அனுமதிக்க வேண்டும். பெங்களூரில் இருந்து 90 கி.மீ., துார பயணம், 1.15 மணி நேரமாக இருக்கும்.இங்கு சர்வதேச மைதானம் கட்டப்படுவதால், மாவட்டத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். நான் தவறு எதுவும் செய்யவில்லை; எதற்காக நான் பயப்பட வேண்டும்?இவ்வாறு அவர் பேசினார்.