| ADDED : நவ 21, 2025 02:02 PM
கோல்கட்டா: மேற்குவங்கம், ஜார்க்கண்டில் நிலக்கரி கடத்தல் மற்றும் முறைகேடு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளும், கோடிக்கணக்கான மதிப்பில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நிலக்கரி ஊழல் மற்றும் முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்க்கண்டில் 18 இடங்களிலும், வங்கதேசத்தில் 24 இடங்களிலும் ஒரே சமயத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. குறிப்பாக, அரசு பொதுத்துறை நிறுவனமான பிசிசிஎல்லுடன் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் தேவ் பிரபா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கருப்பு நிலக்கரி வர்த்தகம், முறையற்ற ஒப்பந்தங்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. தொழிலதிபர்கள் அனில் கோயல், சஞ்சய் கேம்கா, பினோத் மஹாதோ, சன்னி கேஷரி உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, முக்கிய ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை விபரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.