வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தானாக விலகி இருந்து குற்றச் சாட்டு மெய்ப்பிக்க்கவில்லை எனில் தொடர் பணப் பலன்களுடன் பணியில் சேர வேண்டும்.
புதுடில்லி: மூட்டை மூட்டையாக பணக்குவியல்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.டில்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டில்லி துக்ளக் சாலையில் இவர் வசித்து வரும் அரசு பங்களாவில், கடந்த 14ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அப்போது, அந்த பங்களாவில் தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்திருந்த அறையில் மூட்டை மூட்டையாக பணக்குவியல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் துறை ரீதியிலான விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையை பெற்ற உச்ச நீதிமன்றம், மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்துள்ளது.மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் கடந்த 20ம் தேதி ஆலோசனை நடத்திய நிலையில் நேற்று மீண்டும் கூடியது. அப்போது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பி வைத்தது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட உடன், அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவார்.இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறை பணிகள், மறு உத்தரவு வரும் வரை உடனடியாக திரும்பப் பெறப்படுவதாக டில்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.இதற்கிடையே, தேசிய நீதித்துறை நியமன கமிட்டி விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று காலை, ராஜ்யசபாவின் முன்னவர் நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்கள் மேத்யூஸ் ஜெ.நெடும்பாறா மற்றும் மூவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடும்படி கோரப்பட்டுள்ளது. மேலும், 1991ல் கே.வீராசாமி என்பவரது வழக்கில், 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதியின்றி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது' என வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் கோரப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தானாக விலகி இருந்து குற்றச் சாட்டு மெய்ப்பிக்க்கவில்லை எனில் தொடர் பணப் பலன்களுடன் பணியில் சேர வேண்டும்.